சென்னை: ஜிஎஸ்டி சாலையில் தனியார் கல்லூரி பேருந்து விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகளின் வசதிக்காக, 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
சென்னை விமான நிலையம் அருகே பல்லாவரம் மேம்பாலத்தில் நேற்று காலை தனியார் கல்லூரி பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால், சென்னை விமான நிலையம் – குரோம்பேட்டை இடையே ஜிஎஸ்டி சாலையில் இரண்டரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால், அலுவலகம், கல்லூரி செல்பவர்கள் பாதிக்கப்பட்டனர். விமானங்களில் பயணம் செய்ய சென்னை விமான நிலையத்துக்கு செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். ஏராளமான விமான பயணிகள், தாங்கள் பயணம் செய்ய இருக்கும் விமான நிறுவனங்களை செல்போனில் தொடர்பு கொண்டு, போக்குவரத்து நெரிசல்களில் சிக்கி தவித்து கொண்டு இருப்பதாக தெரிவித்தனர்.
பயணிகளின் கோரிக்கையை விமான நிறுவனங்கள் ஏற்றன. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த விமான பயணிகள், விமானங்களில் வந்து ஏறுவதற்கு வசதியாக, சென்னையில் இருந்து நேற்று காலை புறப்பட வேண்டிய விமானங்களான கவுகாத்தி, ஹைதராபாத், தூத்துக்குடி, கொல்கத்தா, புனே, ராஜமுந்திரி, மதுரை, கோலாலம்பூர், மஸ்கட், இலங்கை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்10-க்கும் மேற்பட்ட விமானங்கள் அரை மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.