சென்னை: போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் மோசடி நடந்துள்ளது. தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயிக்க வேண்டும்; உழைப்பு மற்றும் ஊதியச் சுரண்டலைக் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 15 ஆம் ஊதிய விகிதத்தின்படி நடப்பு மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவிருக்கும் நிலையில், ஊதியத்தை நிர்ணயம் செய்வதில் திட்டமிட்டு பல மோசடிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதனால், போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை ஊதிய இழப்பு ஏற்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த ஊதியத்தில் கூட சுரண்டும் போக்கு கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 15 ஆம் ஊதிய ஒப்பந்தம் கடந்த மே 29 கையெழுத்திடப்பட்டது. அதன்படி தொழிலாளர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய ஒப்பந்தம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பின்தேதியிட்டு செயல்படுத்தப்படவுள்ளது என்ற போதிலும், புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படியான முதல் ஊதியம் நடப்பு மாத இறுதியில் தான் வழங்கப்படவுள்ளது.
அதற்கான ஊதியப் பட்டியல் தயாரிக்கப்படும் நிலையில் தான், புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி தொழிலாளர்களுக்கான மாத ஊதியம் முறையாக நிர்ணயிக்கப் படவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. போக்குவரத்துக்கழக நிர்வாகங்களும், உயரதிகாரிகளும் இணைந்து தான் ஊழியர்களிடம் ஊதிய சுரண்டலை செய்திருக்கின்றனர் என்பது அம்பலமாகியிருக்கிறது.
தொழிலாளர்களின் ஊதியம் எவ்வாறு சுரண்டப்படுகிறது என்பதை விளக்குகிறேன். புதிய ஊதிய விகிதம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருவதால், அந்த அடிப்படையில் கணக்கிட வேண்டும். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓர் தொடக்கநிலை ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.17,500 ஆகும். அவருக்கு 6% ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகையான ரூ.1050 சேர்க்கப்பட வேண்டும்.
அது ரூ.1050 அல்லது அதற்கும் கூடுதலாக இருந்தால், ரூ.1100 ஆகவும், ரூ.1050-ஐ விட குறைவாக இருந்தால் ரூ.1000 ஆகவும் மாற்றி முழுமையாக்கப்படும். அதனால், அந்தத் தொழிலாளியின் அடிப்படை ஊதியம் ரூ.18,600 ஆக உயரும். ஆனால், போக்குவரத்துக்கழக பணியாளர்களின் ஊதிய விகிதத்தில் ரூ.18,600 என்ற ஊதிய நிலை இல்லை. இது ரூ.18,500 என்ற ஊதிய நிலையை விட அதிகம் என்பதால், அடுத்த நிலையான ரூ.19,100 க்கு உயர்த்தப்படும். 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆண்டு ஊதிய உயர்வாக 3%, அதாவது ரூ.600 சேர்க்கப்பட்டு, அவரது அடிப்படை ஊதியம் ரூ.19,700 ஆக அதிகரிக்கும். அத்துடன் அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உள்ளிட்டவை சேர்த்து அவரது மொத்த ஊதியம் நிர்ணயிக்கப்படும். அந்த ஊதியம் தான் நடப்பு மாதம் வழங்கப்படும்.
ஆனால், 6% ஊதிய உயர்வை முழுமையாக சேர்க்காத அதிகாரிகள், முதலில் 3%, அடுத்து 3% சேர்த்து ஊதிய விகிதத்தைக் கணக்கிட்டுள்ளனர். ரூ.17,500 அடிப்படை ஊதியத்துடன் முதலில் 3% சேர்க்கப்பட்டால், கூடுதலாக ரூ.525 கிடைக்கும். இது ரூ.550-ஐ விட குறைவு என்பதால், அது ரூ.500 என முழுமையாக்கப்படும். அதேபோல், அடுத்த 3 விழுக்காட்டுக்கும் ரூ.500 மட்டும் சேர்க்கப்படும்.
அதனால், அந்த ஊழியரின் அடிப்படை ஊதியம் ரூ.18,500 என்ற நிலைக்கு உயர்த்தப்படும்.2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆண்டு ஊதிய உயர்வாக 3%, அதாவது ரூ.600 சேர்க்கப்பட்டு, அவரது அடிப்படை ஊதியம் ரூ.19,100 ஆக அதிகரிக்கும். இது இயல்பாக அவருக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை ஊதியமான ரூ.19,700 ஐ விட ரூ.600 குறைவு ஆகும். அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி ஆகியவற்றிலும் இது எதிரொலிக்கும் என்பதால் தொடக்க நிலை ஊழியரின் ஊதியம் அவருக்கு இயல்பாக கிடைக்க வேண்டியதை விட ரூ.1000 குறையும்.
சில ஊதிய நிலைகளுக்கான ஊதிய உயர்வு எவ்வாறு கணக்கிடப்பட்டாலும் அதில் பாதிப்பு எதுவும் ஏற்படாது. அதேநேரத்தில் மூத்த தொழிலாளர்களின் அடிப்படை ஊதிய விகிதம் இவ்வாறு கணக்கிடப்படும்போது அவர்களின் அடிப்படை ஊதியம் ரூ.2,000 வரையிலும், மொத்த ஊதியம் ரூ.3000 வரையிலும் குறையும். ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.36,000ஐ அவர்கள் இழப்பர். இது மிகப்பெரிய உழைப்புச் சுரண்டல் ஆகும். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் 1.10 லட்சம் தொழிலாளர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் இந்த ஊதிய மற்றும் உழைப்புச் சுரண்டலால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இது 4 ஆண்டுகள் என அதிகரிக்கப்பட்டதால், ஓராண்டுக்கான ஊதிய உயர்வை அவர்கள் இழந்தனர். இந்த வகையில் 30 ஆண்டுகள் பணி செய்யக்கூடிய ஒரு தொழிலாளி 10 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வை இழப்பார்.
அதுமட்டுமின்றி, இப்போது கையெழுத்திடப்பட்டுள்ள 15 ஆம் ஊதிய ஒப்பந்தத்தின்படி உயர்த்தப்பட்ட ஊதியத்திற்கான நிலுவைத் தொகை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வழங்கப்படுவதற்கு பதிலாக 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தான் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால், ஓராண்டுக்கான ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை போக்குவரத்துக்கழக ஊழியர்கள் இழப்பார்கள்.
இவ்வளவு தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டிருக்கும் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள் மீது ஊதியச் சுரண்டல் என்ற புதியத் தாக்குதலையும் திமுக அரசு நடத்தியிருக்கிறது. மனசாட்சியும், மனித நேயமும் உள்ள எந்த அரசும் இப்படி ஒரு சுரண்டலில் ஈடுபடாது. ஆனால், திமுக அரசுக்கு அவை இரண்டும் இல்லை.
அதனால், தொழிலாளர்கள் மீது எத்தகைய தாக்குதலையும் நடத்தத் தயங்காது. இந்த சுரண்டலால் திமுகவின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தொழிலாளர்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். தொழிலாளர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் ஊதிய விகிதத்தை ஒப்பந்தப்படி நியாயமாகவும் நேர்மையாகவும் போக்குவரத்துக் கழகங்கள் நிர்ணயிக்க வேண்டும்; உழைப்பு மற்றும் ஊதியச் சுரண்டலைக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.