கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என அரசு தரப்பு சிபிஐ வழக்கறிஞர் சுரேந்திர மோகன் தெரிவித்தார்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தண்டனை விவரத்தை நீதிபதி மதியம் அறிவிப்பார்.
கைது செய்யப்பட்ட 9 பேர் மீதான கூட்டு பாலியல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம். வழக்கில் 48 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன யாரும் பிறழ் சாட்சியாக மாறவில்லை. பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் மற்றும் தீர்ப்புகளை மேற்கோள் காட்டி அதிகபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
வழக்கில் மின்னணு சாதனங்கள் முக்கிய ஆதாரமாக இருந்தன. வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்கள் மீட்டெடுக்கப்பட்டன. குற்றவாளிகளுக்கு எதிரான வீடியோக்கள் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 9 பேரும் திருமணம் ஆகாதவர்கள், வீட்டில் வயதானவர்கள் இருக்கிறார்கள் என்ற காரணங்களை மேற்கோள் காட்டி தண்டனை குறைத்து வழங்க வேண்டும் என எதிர்தரப்பு வாதம் செய்தது.
பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் சுதந்திரமாக வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அதற்கு உறுதுணையாக அரசு தரப்பும் சிபிஐ அதிகாரிகளும் உடனிருந்தனர். எதிர்தரப்பு வாதங்களை ஏற்கக் கூடாது என நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
அரிதினும் அரிதான வழக்காக இதை பார்க்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கில் ஒரு பாடமாக குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.