பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ம் தேதி இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படும் என கோவை மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் தொடர்பான புகாரில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அண்மையில் 9 பேரும் மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் சாட்சி விசாரணை குறித்து நீதிபதி நந்தினிதேவி கேள்விகள் கேட்டார்.
தொடர்ந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணைக்காக பொள்ளாச்சி நகர சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவரிடம் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் அரசு மற்றும் எதிர் தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு மே 13-ம் தேதி வழங்கப்படும் என மகளிர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவியை, கரூர் குடும்ப நல நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.