பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பல்வேறு அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி , பல்வேறு அமைப்பினர் அளித்த கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார்.
தமிழகம் முழுவதும் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக தனியார் தங்கும் விடுதி அரங்கில் நடைபெற்ற பல்வேறு விவசாய, தொழில் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இதில் கைத்தறி நெசவாளர்கள் சங்கம் சார்பில், கைத்தறி நெசவாளர்களுக்கு வீடு கட்டித்தரவும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பொள்ளாச்சியில் கைத்தறி பூங்கா அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையின் சார்பில், பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவும், ஈழுவ-தீய சமூகத்தின் சார்பில், ஈழுவ-தீய சமூகத்தை ஓபிசி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தென்னந்திய தென்னை சாகுபடியாளர்கள் சங்கம் சார்பில், ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு போயர் சமூகம் மக்கள் கூட்டமைப்பு சார்பில், போயர் சமூக நல வாரியம், மற்றும் கிருஷ்ண போயருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும்.
விநாயகா தென்னை உற்பத்தி நிறுவனம் சார்பில்,‘ பிஏபி பாசனத்திட்டத்தில், பாசனம் நடைபெறாத பகுதிகளை நீக்கி, பாசன வசதி இல்லாத பகுதிகளை சேர்க்கவும், கோதவாடி குளத்துக்கு பிஏபி தண்ணீர் வழங்கவும், தேவம்பாடி குளத்தை சுற்றுலா பகுதியாக அறிவிக்கவும் வேண்டும். ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கம் சார்பில், நீர்வளத்துறையில், வாய்கால் பராமரிப்பு பணியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், விவசாயிகளிடம் குறைவான விலையில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
குறைந்து பட்சம் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும். கலப்பு தீவனத்தை 50 சதவீதம் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும். ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணைய் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து பேசினர்.
அப்போது வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வழங்க வேண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை சமாதனப்படுத்தி உட்கார வைத்தனர்.
பின்னர் கலந்துரையாடல் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசும்போது,‘ மீண்டும் அதிமுக ஆட்சி வரும்போது, பசுமை வீடுகள் திட்டம் தொடரும், பொள்ளாச்சியை மாவட்டமாக உருவாக்க கோரிக்கை விடுத்தனர். ஒரு மாவட்டத்தை உருவாக்க ரூ.500 கோடி வேண்டும். அதிமுக ஆட்சியில் 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது.
அதிமுக அரசு அமைந்த பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படும். ஆயக்கட்டு பகுதிகளில் எவ்வளவு நிலம் மனைகளாக பிரித்து விற்கப்பட்டதோ, அது குறித்து ஆய்வு செய்து பாசனநீரை முழுமையாக பயன்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும். அத்திக்கடவு – அவினாசி திட்டம் முழுமையாக மாநில நிதியில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. குடிமராமத்து திட்டத்தில் நீர்நிலைகள் தூர்வாரப்படும். கால்நடை தொழில் மேம்பாட்டுக்கு கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் பல துறைகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
எல்லா துறையும் வளர்ச்சி பெற்றது. ஆனைமலை நல்லாறு திட்டம் குறித்து அதிமுக ஆட்சியில் பல முன்னேடுப்புகள் நடைபெற்றது. கேரளா அரசுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. திமுக ஆட்சியில் ஆனைமலை நல்லாறு திட்டத்துக்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. இங்கு பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.