சென்னை: பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமனை தமிழக அரசு நியமித்துள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
வழக்கமாக புதிய சட்டம்- ஒழுங்கு டிஜிபி பணியிடம் காலியாக உள்ள 3 மாதங்களுக்கு முன்பே தமிழக அரசு அடுத்த தகுதியான 8 பேரின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்கும். அதில், 3 பேர் பட்டியலை ஆணையம் தமிழக அரசுக்கு மீண்டும் அனுப்பும். அதில், ஒருவரை தமிழக அரசு புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கும்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 8 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், அவர் இன்றுடன் (31-ம் தேதி) ஓய்வு பெறுவது உறுதி ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவில் இருந்த வெங்கடராமனை தமிழக அரசு நியமிக்க முடிவு செய்தது. இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெங்கடராமன் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1968-ல் பிறந்த இவர், 1994-ல் ஐபிஎஸ் ஆக தேர்வாகி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றினார். குறிப்பாக முக்கியம் வாய்ந்த சிபிசிஐடி தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவிகளில் பணியாற்றி அரசின் பாராட்டை பெற்றவர்.