சென்னை: பொருளாதாரம் மிகவேமாக வளர்ந்து வருவதால் இந்தியாவில் கண்காட்சி தொழிலுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக மத்திய சுற்றுலாத் துறை கூடுதல் செயலர் சுமன் பில்லா தெரிவித்தார். இந்திய கண்காட்சி தொழில் சங்கம் சார்பில், “இந்தியாவில் கண்காட்சி, கூட்டம், கருத்தரங்கு நடத்தும் தொழில்களுக்கு உகந்த சூழலை உருவாக்குவது” என்ற தலைப்பிலான ஒருநாள் கருத்தரங்கம், சென்னையில் நேற்று நடந்தது.
இக்கருத்தரங்கை, மத்திய சுற்றுலாத் துறை கூடுதல் செயலர் சுமன் பில்லா தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் தொழில்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சர்வதேச விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் பிரமிக்கதக்க வகையில் மேம்பாடு அடைந்துள்ளன.
சர்வதேச தரத்தில் சாலைகள் அமைந்துள்ளன. உலகளவில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. உலக நாடுகளின் விருப்ப சந்தையாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளன.
இத்தகைய சூழலில், இந்தியாவில் கண்காட்சி தொழிலுக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் உள்ளன. உலக அளவில் கண்காட்சி தொழில் வர்த்தகம் 850 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் இத்துறை வர்த்தகம் 50 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில்தான் உள்ளது.
இத்துறையில் உலக அளவில் நமது பங்களிப்பு வெறும் 5 சதவீதம்தான். இத்துறையில் அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், தற்போதைய வர்த்தகம் மிகவும் குறைவாக இருக்கிறது. கண்காட்சி தொழில்துறையில் கட்டமைப்பு சரியாக இல்லாததே வளர்ச்சி குறைவுக்கு முதன்மை காரணம் ஆகும். ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய இத்துறையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மாநில அரசுகள் கண்காட்சி தொழில்துறைக்கென தனி பிரிவை மாநில அளவிலும், நகரங்கள் அளவிலும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கருத்தரங்கில், இந்திய கண்காட்சி தொழில் சங்கத்தின் தலைவர் சூரஜ் தவான், தென்பிராந்திய தலைவர் டி.ஜி.ஸ்ரீகாந்த், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக மேலாண் இயக்குநர் டி.கிறிஸ்துராஜ், ஆந்திரா சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் அம்ரபாலி கட்டா, கர்நாடகா சுற்றுலாத் துறை ஆணையர் கே.வி.ராஜேந்திரா, அந்தமான் நிக்கோபார் தீவுகள் யூனியன் பிரதேசத்தின் சுற்றுலா துறை செயலர் ஜோதி குமாரி, கேரளா சுற்றுலாத்துறை இயக்குநர் சிகா சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.