சென்னை: இரு பிரிவினருக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பொய் தகவலை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தருமபுரம் ஆதினம் ஏற்பாட்டில் சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற சைவ சிந்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த மே 2-ம் தேதி மதுரை ஆதீனம் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, உளுந்தூர்பேட்டை – சேலம் ரவுண்டானா பகுதியில் மதுரை ஆதினத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மாநாட்டில் பேசிய மதுரை ஆதினம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளது என்றும், இதில் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார். மேலும், தன் கார் மீது மோதிய காரில் வந்தவர்கள் குல்லா அணிந்தனர், தாடி வைத்திருந்தனர் எனவும் கூறியிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில், இவரது பேச்சு இரு மதத்தினருக்கு இடையே குழப்பத்தையும், மோதலையும் உருவாக்கும் வகையில் இருப்பதாக கூறி சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் சைபர் க்ரைம் காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், ஆதீனத்துக்கு எதிராக நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மதுரை ஆதினம் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், உள் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் ஜூலை 14-ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.