சென்னை: சைவம், வைணவத்துடன் பெண்களை தொடர்புபடுத்தி முன்னாள் அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசிய பேச்சுக்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது இந்த பேச்சு காரணமாக பொன்முடி தனது பதவியை இழக்க நேரிட்டது. பொன்முடிக்கு எதிராக 140-க்கும் மேற்பட்ட புகார்கள் போலீஸில் அளிக்கப்பட்டன.
பொன்முடியின் இந்த பேச்சு தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்பதால் முடித்து வைக்கப்பட்டது எனக்கூறி அறிக்கையை தாக்கல் செய்தார்.
அப்போது நீதிபதி, இந்த புகார்களின் மீது வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என போலீஸார் எப்படி முடிவுக்கு வந்தனர். இந்த புகார்களை வேக, வேகமாக முடித்து வைத்தது போல மற்ற புகார்கள் மீதும் வேகம் காட்டுவார்களா என்றார். அப்போது புகார்தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, புகார்தாரர்களுக்கு தெரிவிக்காமலேயே புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்றார்.
அதற்கு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், போலீஸார் புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார்தாரர்கள் வேண்டுமென்றால் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம். பொன்முடி தெரிவித்த கருத்து அவருடைய சொந்த கருத்து அல்ல. 1972-ம் ஆண்டு ஒரு சமூக சீர்திருத்தவாதி தெரிவித்த கருத்து. அதைத்தான் பொன்முடியும் மேற்கோள் காட்டி பேசினார், என்றார்.
அதையடுத்து நீதிபதி, “சைவம், வைணவம் மற்றும் பெண்கள் தொடர்பாக பொன்முடி பேசிய முழு வீடியோவையும், அவர் மேற்கோள் காட்டி பேசியதாக கூறப்படும் 1972-ம் ஆண்டுக்கான ஆதாரத்தையும் அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆக.28க்கு தள்ளி வைத்துள்ளார்.