சென்னை: சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தான் அளித்த புகாரை போலீஸார் நிராகரித்து விட்டதாக பாஜக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, கடந்த ஏப்ரலில் சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த பேச்சுகாரணமாக அவரது அமைச்சர் பதவியும் பறிபோனது. உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையின்போது, பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராகப் பெறப்பட்ட 115 புகார்களில் 71 புகார்கள் முடித்து வைக்கப்பட்டுவிட்டன என்றும், 40 புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து தபால் மூலமாக தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும், 4 புகார்கள் ஆன்லைன் மூலமாக முடித்து வைக்கப்பட்டது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்புகை பெறப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கு ஆக.14-க்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பொன்முடிக்கு எதிராக தான் அளித்த புகார் மனுவை போலீஸார் நிராகரித்து விட்டதாகக் கூறி, பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனு: முன்னாள் அமைச்சர் பொன்முடி, பெண்களையும், குறிப்பிட்ட சமுதாயங்களையும் அவதூறாகப் பேசியுள்ளார். ஏற்கெனவே பட்டியலின சமுதாயம் குறித்தும், அவரது தொகுதி வாக்காளர்கள் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார்.
எனவே பொன்முடிக்கு எதிராக குற்றவியல் ரீதியாக வழக்குப்பதிவு செய்யக் கோரி நான் அனுப்பிய புகார் மனுவை சென்னை சைபர் க்ரைம் போலீஸார் நிராகரித்து உத்தரவிட்டுள்ளனர். இது சட்டவிரோதமானது.
எனவே பொன்முடிக்கு எதிராக குற்றவியல் ரீதியாக வழக்குப்பதிவு செய்வதுடன், இந்த வழக்கை சிபிஐ அல்லது வேறு ஏதாவது சிறப்பு புலனாய்வு அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.