சென்னை ரெட்டேரி பகுதி அருகே பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று உங்கள் குரலில் வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த வாசகர் ஒருவர் இந்து தமிழ் திசை நாளிதழின் பிரத்தியேக அழைப்பு எண் உங்கள் குரல் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவித்ததாவது: சென்னை மாதவரம், 32-வது வார்டுக்கு உட்பட்ட செந்தில் நகர் பகுதியில் பிவிஆர் புட் ஸ்ட்ரீட் என்ற பெயரில் உணவு வணிக வளாகம் உள்ளது. இந்த இடத்தில் மத்திய சென்னை பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.
அன்றைய தினமே பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து கடை உடனடியாக மூடப்பட்டது. பெண்கள், குழந்தைகள் என அதிகளவில் பொதுமக்கள் கூடும் இடத்தில் மதுபான கடையை திறக்க கூடாது என வலியுறுத்தினோம். மேலும் இந்த பகுதியில் 2 சிபிஎஸ்இ மேல்நிலை பள்ளிகளும், ஒரு மழலையர் பள்ளியும், சிறுவர் விளையாட்டு பூங்காவும் இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்.
இந்த இடத்தில் மதுக்கடை திறக்கப்பட்டால் மற்ற கடைகளின் வியாபாரம் பாதிப்பதோடு மட்டுமில்லாமல், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். மதுக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் யாரும் அங்கே செல்ல முடியாது. கடை திறந்த போது நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் தலையிட்டு கடையை மூடினர், கடை திறக்கப்படாது என உறுதி அளித்தனர்.
ஆனால் டாஸ்மாக் நிர்வாகம் நீதிமன்றத்தை அணுகி கடையை திறக்க முயற்சித்து வருகிறது. இது தொடர்பாக தாசில்தார், காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு கடிதம் வழங்கி உள்ளோம். இந்த கடை செயல்பட தொடங்கினால் இந்த இடம் சமுக விரோதிகளின் கூடாரமாக மாறிவிடும். இந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.