கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் நாடகத்தனமானது. மக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் அரசு திமுக அரசு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார்.
சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில் பகுதி விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன், சிதம்பரத்தில் நேற்று கலந்துரையாடிய பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருவாய்த் துறை அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தனர். எனது தலைமையிலான அரசிலும் இது தொடர்ந்தது. இந்த திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் விளம்பரப்படுத்துகிறார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தமிழகம் முழுவதும் சென்று மனுக்களை வாங்கினார்கள். கடந்த 4 ஆண்டுகளில் அவற்றுக்குத் தீர்வுகாணவில்லை. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தற்போது தொடங்குவதன் மூலம், மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதை முதல்வரே ஒப்புக் கொள்கிறார். மீதமுள்ள 8 மாதங்களில் என்ன பிரச்சினையை இவர் தீர்க்கப் போகிறார்? இதெல்லாம் நாடகம்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காக, விளம்பர மாடல் அரசு தனது நாடகத்தை தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே 1 கோடியே 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டதாக கூறுகின்றனர். இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இது போன்ற திட்டங்களை புதிது புதிதாக கொண்டுவந்து, அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.
கூட்டணியில் பாமக இல்லை: எங்கள் கூட்டணியில் பாஜக உள்ளது. இன்னும் சில கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லை. ‘வந்தாலும் வரலாம்’ என்றுதான் கூறினேன். பாஜகவுடன் நாங்கள் கூட்டணி வைப்பதை விமர்சிக்கின்றனர். ‘கருணாநிதி முதல்வராக இருந்தபோது யாருடன் கூட்டணி வைத்தார்?’ என்று கேள்வி எழுப்பினேன்.
அதற்கு இதுவரை பதில் இல்லை. நான் அமித் ஷாவுடன் பேசி, பாஜகவுடன் கூட்டணி வைத்த பின்னர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. அந்த பயம்தான் ஸ்டாலினை இப்படிப் பேச வைக்கிறது. திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தபோது அது நல்ல கட்சி, அதிமுக கூட்டணி வைத்தால் அது மதவாதக் கட்சியா? இது எந்த வகையில் நியாயம்? ‘எங்களது கூட்டணி ஆட்சி அமைக்கும்’ என்று அமித் ஷா சொல்கிறார்.
இதை தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தக் கூட்டணிக்கு தமிழகத்தில் நான்தான் தலைமை. நாங்கள் இருவரும் அமர்ந்து பேசி, தெளிவு செய்து கொண்ட விஷயம் இது. அதிமுக ஆட்சி அமைக்கும்; நான் முதல்வர். இதற்கு மேலும் உங்களுக்கு விளக்கம்தர வேண்டுமா? மக்களிடத்தில் எழுச்சியைப் பார்க்கிறேன். திமுகவின் வீழ்ச்சி தெரிகிறது.
தெளிவான எங்கள் கூட்டணி வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். இவ்வாறு பழனிசாமி கூறினார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், செல்வி ராமஜெயம், எம்எல்ஏ சிதம்பரம் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன் உடன் இருந்தனர்.