கோவை: பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் கோவை மண்டல இணை ஆணையரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில், கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பு அனுமதி வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்ததாகவும், இதனால் கோயிலின் ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும் பேரூர் பட்டீசுவரர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் மீது சர்ச்சைகள் எழுந்தன. இந்தச் செயலுக்கு சிவனடியாா்கள், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில், அதன் நிர்வாகிகள் இன்று (ஜூலை 23) பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத்து றையின் கோவை மண்டல இணை ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ் தலைமை வகித்தார். கோட்ட பொதுச் செயலாளர் பாபா கிருஷ்ணன், மாவட்ட செய்தி தொடர்பாளர் சி.தனபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நிர்வாகிகள் அங்குள்ள இணை ஆணையர் ரமேஷை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘‘கடந்த 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு, பட்டீசுவரர் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. அதன் பின்னர், ஒருவர் தரிசனம் செய்ய வருகிறார். அவருக்காக பூட்டிய கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்து மத ஆகம விதிகளின்படி, பூட்டிய கோயில் நடையை மறுநாள் தான் திறக்க வேண்டும். ஆனால், ஆகம விதிகளுக்கு புறம்பாக, பேரூர் பட்டீசுவரர் கோயிலின் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கோயில்களில் இதுபோன்ற ஆகம விதிமீறல்கள் நடக்கக்கூடாது என இந்து சமுதாய மக்கள் விரும்புகின்றனர். எனவே, ஆகம விதிகளுக்கு எதிராக கோயில் நடையை திறந்த அறநிலையத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’எனக் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட இணை ஆணையர், இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மனு அளித்தவர்களிடம் உறுதியளித்தார்.