கோவை பேரூரில் பழமை வாய்ந்த பட்டீசுவரர் கோயில் உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இரவு நடை அடைக்கப்பட்ட பிறகு மறுநாள் திறக்கப்படும்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஆகம நடைமுறைகளை மீறி, பேரூர் பட்டீசுவரர் கோயிலின் நடை இரவில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோயிலுக்கு வந்த சிவனடியார் ஒருவர் வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இவ்விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கூறும்போது, ”வழக்கமாக தினமும் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப் படும். அதற்கு முன்னதாக 8.30 மணிக்கு சுவாமியின் சந்நதி முன்பு திரை மூடப்படும். பக்தர்கள் யாராவது வந்தால் திரைச்சீலை திறக்கப்படாது. அர்ச்சகரிடம் திருநீறு வாங்கிச் செல்லலாம். கடந்த 19ம் தேதி இரவு இக்கோயிலுக்கு சிறப்புக் காவல் படை காவல் கண்காணிப்பாளர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார்.
அவர் கோவை மாவட்டத்திலும் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அவர் வரும் போது சுவாமியின் சந்நதியில் திரைச் சீலை மூடப்பட்டு இருந்தது. அவர் அர்ச்சகரிடம் திருநீறு வாங்கிச் சென்று விட்டார். திரையை அகற்றி சுவாமியை அவர் தரிசனம் செய்யவில்லை. அதற்கு அனுமதியும் வழங்கவில்லை. அதனால், ஆகம விதிகள் மீறப்பட்டதாக கூறுவது தவறானது” என்றனர்.