சென்னை: பேராசிரியர் வருகை பதிவு குறைவு, பேராசிரியர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக தமிழகத்தின் 35 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடுமுழுவதும் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்களின் வருகைப் பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது.
அதன்படி, நடப்பாண்டு தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிர்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகை பதிவு, பேராசிரியர் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன.
அதன்பேரில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதன் காரணமாக நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கோ, கலந்தாய்வுக்கோ எந்த தடையும் ஏற்படாது என்று 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் என்றும் மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கட்சித் தலைவர்கள் மற்றும் சங்கங்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்ககளை வைத்துள்ளன.
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை என்றால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பு சிதைந்து போய் விடும். உங்கள் விளம்பர ஆசைக்கு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்வி கனவை பறிகொடுக்க முடியாது என்பதை முதல்வர் உணர வேண்டும். உடனடியாக, தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, தேசிய மருத்துவ ஆணையத்தின் அங்கீகாரம் தொடர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான பேராசிரியர் பணியிட கலந்தாய்வை உரிய நேரத்தில் நடத்தி முடிக்க தவறியதே காலிப்பணியிடங்கள் அதிகரிக்கக் காரணம் என மருத்துவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணையம் கோரிய விளக்கத்துக்கு உரிய பதில் அளித்து, அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் பேராசிரியர் காலிப் பணியிடங்களை விரைந்து நிறைவேற்றுவதற்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும்.
அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம்: மருத்துவத் துறையில் ஆண்டுதோறும் நடைபெற வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு உரிய நேரத்தில் நடத்துவதில்லை. 700 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனை செய்யாமல் இருக்கும் பணியிடங்களை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளில் இருக்கிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்பு 10 மருத்துவக் கல்லூரிகள் இருந்தபோது 5,000 பணியிடங்கள் இருந்தன.
தற்சமயம் 35 கல்லூரிகளுக்கு 20,000 பேர் தேவை என்கிற நிலையில் வெறும் 12,000 பணியிடங்களே உள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் போதுமான அளவு பணியிடங்களை உருவாக்கி உரிய நேரத்தில் கலந்தாய்வு நடத்தி வந்தாலே போதும். நீண்ட நாட்களாக இதை கொரிக்கைகளாக வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளன.