தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு வரும் ஜூலை மாதம், கோவையில் சுற்றுப்பயணத்தை தொடங்க அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தை ஏற்கெனவே கூட்டி கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிப்பது தொடர்பாக விவாதித்து வருகிறார்.
இதற்கிடையில் மீண்டும் மாவட்ட செயாலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டத்தை வரும் ஜூன் 24, 25 தேதிகளில் கூட்ட உள்ளார். ஒவ்வொரு கூட்டத்திலும், வாக்குச்சாவடி அளவிலான பாக கிளை நிர்வாகிகளை நியமிக்க அறிவுறுத்தி வருகிறார். இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேர்க்கவும் அறிவுறுத்தி வருகிறார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பழனிசாமி, இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தார்.
தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைந்துள்ள நிலையில் வரும் ஜூலை மாதத்தில் சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு தொகுதிவாரியாகச் சென்று, மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்பது, சாலை மார்க்கமாக சென்று தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திப்பது எனவும் கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்றும், அடுத்த வாரம் நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு பழனிசாமி அறிவுறுத்த இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.