சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்த எங்கள் நிலைப்பாட்டை ஜனவரியில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: திமுக பொதுக்குழுவில் எங்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த்-துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுகவுக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.
தேமுதிகவுக்கு 2026-ல் மாநிலங்களவை இடம் கொடுக்கப்படும் என அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலின் போதே அதிமுக கூட்டணியில் 5 இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மற்றும் முத்த நிர்வாகிகள் வாய்மொழியாக மட்டுமின்றி எழுத்துப்பூர்வமாகவும் உறுதி அளித்தனர். அதை அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக இருப்பதால்தான் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஏனெனில், 2024 மக்களவைத் தேர்தலின் போதே எழுதி தரப்பட்ட ஒப்பந்தத்தில் வருடம் இல்லை. அதுதொடர்பாக கேட்டதற்கு வழக்கமாக வருடம் குறிப்பிடமாட்டோம். ஆனால், உறுதியாக ஓரிடம் தருகிறோம் என்றனர்.
ஏற்கெனவே அன்புமணி, ஜி.கே.வாசனுக்கு அதிமுக தரப்பில் மாநிலங்களவை இடம் தரப்பட்டுள்ளது. அதேபோல், இந்த முறை தேமுதிகவுக்கு என்று உறுதி செய்துள்ளனர். அரசியல் என்பது தேர்தலை ஒட்டியதுதான். 2026 தேர்தலை ஓட்டிதான் மாநிலங்களவை இடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் கடமையை ஆற்றியுள்ளனர். தேர்தலை ஒட்டியே எங்களின் கடமையை செய்வோம். ஜனவரி 9-ம் தேதி கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில்கூட்டணி குறித்த நிலைபாட்டை முடிவு செய்வோம். அடுத்த 6 மாதம் தேர்தலை நோக்கி எங்கள் பயணம் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த சந்திப்பின்போது தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதற்கிடையே அதிமுக சீட் வழங்காததால் தேமுதிக அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால்தான் அந்த கூட்டணியில் இருப்பதை பிரேமலதா உறுதி செய்யயவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.