சென்னை: தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: லண்டனில் அம்பேத்கர் படிக்கும்போது தங்கியிருந்த இல்லத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்துள்ளார். அந்த இல்லம் ஏலத்துக்கு வருவதை அறிந்து அதனை பாஜக வாங்கியது. அம்பேத்கரை பற்றி புகழ்பாடிக் கொண்டிருக்கும் யாருமே கண்டுகொள்ளாத நிலையில், பாஜக ஏறக்குறைய ரூ.30 கோடி செலவு செய்து, அந்த இல்லத்தை வாங்கி மதிப்புமிக்க நிரந்தர ஆவண காப்பகமாக மாற்றி வைத்திருக்கிறது.
அங்கு பெரியாரோடு அம்பேத்கர் இருக்கும் படத்தை பார்த்து மகிழ்ந்தேன் என முதல்வர் சொல்கிறார். மாற்றுக் கருத்துடைய தலைவர்களின் படத்தை அகற்றாமல் பரந்த மனப்பான்மையோடு பாஜக நடந்து கொள்கிறது.
வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்க்க அடிப்படை காரணம் பிரதமர் மோடி தான். ஜிஎஸ்டி சீரமைப்புக்காக நன்றி தெரிவித்து அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனைத்து மாநில அரசுகளும் கடிதம் அனுப்பி உள்ளன. ஆனால், ஆளும் திமுக அரசு ஒரு கடிதம் கூட அனுப்பவில்லை.
அரசியல் சிந்தனை மட்டுமே அவர்களுக்கு உள்ளது. பாஜக கூட்டணி பலமாக உள்ளது. 2026-ல் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, தமிழர்களின் எண்ணம் அவரோடு இருக்கிறது என்பதை தமிழக எம்.பி.க்கள் பறைசாற்ற வேண்டும். டிடிவி தினகரன் கூறியது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் அதிமுக உட்கட்சி பிரச்சினை பற்றி கருத்து கூற விரும்பவில்லை. 2026 தேர்தலுக்குள் கூட்டணியில் நிலவும் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இவ்வாறு தமிழிசை கூறினார்.