சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தேமுதிக சேர உள்ளதாகவும், அதற்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. அப்போது தேமுதிகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதுதவிர ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்படுவதாக தேமுதிகவுக்கு உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தின்படி, சமீபத்தில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு அதிமுக இடம் ஒதுக்கவில்லை.
அதேநேரம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் இடம் வழங்குவதாக அதிமுக அறிவித்தது. இதனால் தேமுதிக தரப்பினர் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து கட்சியின் கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரியில் நடைபெறவுள்ள மாநாட்டில் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் நீடிக்கவில்லை என்பதை தேமுதிக சூசகமாக தெரிவித்தது. அதன்பின் திமுகவுடன் கூட்டணி அமைக்க தேமுதிக ஆர்வம் காட்டத் தொடங்கியது. தமிழக அரசின் திட்டங்களை வரவேற்று தேமுதிக தரப்பில் தொடர்ந்து அறிக்கைகள் வெளியாகின.
இதற்கிடையே, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பிரேமலதா கடந்த ஜூலை 31-ம் தேதி சந்தித்து நலம் விசாரித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது கூட்டணி விருப்பத்தை பிரேமலதா தெரிவித்தாகவும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டியதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக – தேமுதிக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூத்த அமைச்சர் எ.வ.வேலு மூலம் இதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் திருச்சியில் நடந்த தேமுதிக மாவட்டச் செயலாளர் டி.வி.கணேஷ் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு, ஒரே மேடையில் பிரேமலதா மற்றும் சுதீஷுடன் சேர்ந்து மணமக்களை வாழ்த்தியதும் கவனிக்கத்தக்கது.
கூட்டணி குறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு கட்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் பிரேமலதா தீவிரமாக செயல்படுகிறார். அதற்கேற்ப மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தேமுதிகவுக்கு 2011 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு வெற்றி வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, வரும் தேர்தல் எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
அதேநேரம் சென்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் முறையான மரியாதை வழங்கப்படவில்லை. வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகள்தான் எங்களுக்கு ஒதுக்கப்பட்டன. தேர்தல் பணிகளிலும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்கவில்லை. மேலும், பேசியபடி மாநிலங்களவை இடமும் தரப்படவில்லை. எனவே, திமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிட தலைமை திட்டமிட்டுள்ளது. எங்கள் தரப்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் இடங்கள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்க கோரிக்கை வைத்திருந்தோம்.
அதேநேரம், கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளதால், தற்போது வெற்றி வாய்ப்புள்ள 7 தொகுதிகள் வழங்கப்படுவதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்படும். மேலும், விஜயகாந்த் எம்எல்ஏவாக இருந்த தொகுதியில் பிரேமலதாவை போட்டியிட வைக்கவும் ஆலோசனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, தேமுதிகவை சமாதானம் செய்ய அதிமுக, பாஜக தரப்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.