நிர்வாக வசதிக்காக கட்சி மாவட்டங்களை அதிகரித்துக் கொண்டே வரும் திமுக தலைமை, பேரவைத் தலைவர் மு.அப்பாவுவை அடுத்த தேர்தலில் அவரது உட்கட்சி எதிரிகள் காலைவாரி விட்டுவிடக் கூடாது என்பதாலேயே திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக-வை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்திருப்பதாகச் சொல்கிறார்கள் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக முன்னாள் பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் தனிக்காட்டு ராஜாவாக இருந்தார்.
அவரது கட்டுப்பாட்டில் அப்பாவுவின் ராதாபுரம், அம்பாச முத்திரம், நாங்குநேரி தொகுதிகள் வந்தன. ஆனால், மாவட்டத்தில் அப்பாவு பங்கேற்கும் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளை ஆவுடையப்பன் தவிர்ப்பதாக புகார்கள் கிளம்பின. மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே அப்பாவு, ஆவுடையப்பனை ஒன்றாகப் பார்க்க முடிந்தது.
இந்த நிலையில், ராதாபுரத்தில் பேரவைத் தலைவர் அப்பாவுவை வீழ்த்த திமுக-வுக்குள்ளேயே ஒரு கோஷ்டி புறப்பட்டுக் கிளம்பியது. இதற்கு மேலும் இதை இப்படியே விட்டால் அப்பாவுவுக்கு சிக்கலாகிவிடும் என்பதாலேயே நெல்லை கிழக்கு மாவட்ட திமுக-வை கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்திருக்கிறது திமுக தலைமை என்கிறார்கள்.
2024 மக்களவை தேர்தலில் நெல்லை தொகுதி காங்கிரஸுக்கா திமுக-வுக்கா என்ற இழுபறி கடைசி வரைக்கும் நீடித்தது. அப்பாவு மகன் அலெக்ஸ், முன்னாள் எம்பி-யான ஞானதிரவியத்தின் மகன் கிரகாம்பெல் ஆகியோர் நெல்லைக்கு எம்பி-யாகும் கனவில் அப்போது மிதந்தனர்.
இவர்களில் யாருக்கு சீட் கொடுத்தாலும் தொகுதி நமக்குத் தங்காது என்று தெரிந்ததாலேயே காங்கிரஸுக்கு தொகுதியை தந்துவிட்டது திமுக தலைமை. அப்போது எம்பி கனவில் இருந்த அலெக்ஸும் கிரகாம்பெலும் இப்போது எம்எல்ஏ ஆகிவிட துடிக்கின்றனர்.
ஆனால், இவர்களுக்கு வாய்ப்பளித்தால் ஆவுடையப்பன் கோஷ்டி ஆட்டையைக் கலைக்க ஆயிரம் வழிகளைத் தேடும். அந்தச் சிக்கல்கள் எல்லாம் வராமல் இருக்கவே திருநெல்வேலி கிழக்கு மாவட்டத்தை கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்திருக்கிறார்கள்.
இதில், மேற்கு மாவட்டச் செயலாளராக ஆவுடையப்பனை நியமித்திருக்கும் தலைமை, கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக கிரகாம்பெலை நியமித்திருக்கிறது. இதன் மூலம், ஆவுடையப்பனின் ஆளுகைக்குள் இருந்த அப்பாவுவின் ராதாபுரம் தொகுதியும் நாங்குநேரியும் இப்போது கிரகாம்பெல் கன்ட்ரோலுக்கு வந்துவிட்டது.