மதுரை: பேய், பிசாசுடன் ஒப்பிட்டு திமுக, அதிமுகவை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார். மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக பதவியேற்றுள்ள அந்தோணிசாமி சவரிமுத்துவை நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்த சீமான், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள்.
தமிழகத்தை யாரிடத்தில் அடமானத்தில் வைத்துள்ளார்கள், இவ்வளவு நாட்கள் மீட்காமல் என்ன செய்தனர்? தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் பாஜக ஆதரவாளர்கள். எனவே, வட இந்தியர்களுக்கு வாக்களிக்க உரிமை அளிக்கக் கூடாது.
திமுக வரக்கூடாது என்று அதிமுகவுக்கும், அதிமுக வரக்கூடாது என்று திமுகவுக்கும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். பேயை விவாகரத்து செய்துவிட்டு பிசாசையும், பிசாசை விவாகரத்து செய்துவிட்டு பேயையும் திருமணம் செய்துகொள்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். எனது குரல் வலிமையாக ஒலிக்கவேண்டும் என்றால், சட்டப்பேரவையில் என்னை அமரச் செய்ய வேண்டும்.
நடிகர் விஜய் எந்த தத்துவத்தை முன்வைத்து, என்ன போராட்டத்தை முன்னிறுத்தி கட்சி நடத்துகிறார் என்பதை வைத்தே அவரது அரசியல் எதிர்காலம் அமையும். இவ்வாறு சீமான் கூறினார்.