சென்னை: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். ‘அரசியலில் சொகுசுக்கு இடமில்லை. ஆட்சி பொறுப்பை பயன்படுத்தி சமூக மாற்றங்களை செய்து வருகிறோம்’ என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:
இந்திய சமூகச் சூழலில், இவர்களுக்கெல்லாம் எதுவுமே தெரியாது, தெரியக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட சாமானிய மக்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம். அதனால்தான், மக்களோடு மக்களாக மக்களுடைய குரலாக திமுக இன்று ஒலித்துக் கொண்டிருக்கிறது.
மக்களுடைய தேவைகளை, சமூகத்துக்கு தேவையான மாற்றங்களை, ஆட்சிப் பொறுப்பை பயன்படுத்தி நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களை பொருத்தவரை, இங்கு சொகுசுக்கு இடமில்லை. அரசியல் என்றால் ஏதோ ஆட்சிப் பொறுப்புக்கு வந்தோம், பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம், சில கவர்ச்சித் திட்டங்களை செய்தோம், மறுபடியும் பதவி மோகத்தோடு தேர்த லுக்கு தயாராவோம் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், எங்களுடைய அடிப்படையே பதவி அல்ல; பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காக போராடுவது.
பள்ளிக்கு பசியுடன் வரும் குழந்தைகளுக்காக காலை உணவு திட்டத்தை உருவாக்கினேன். இப்போது 21 லட்சம் குழந்தைகளுக்கு நாள்தோறும் சூடாக, சுவையாக சத்தான உணவை பரிமாறுகிறோம். இவற்றை எல்லாம் வாக்கு அரசியலுக்காக செய்யவில்லை. வாக்கு என்பது, மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கை, செயல்திட்டம், உழைப்பு எங்களிடம் உள்ளன.
‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, தற்போது ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறோம். இத்திட்டத்தின்கீழ் 6,082 குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000 வழங்கப்படும்.
பெற்றோரே இல்லாத குழந்தைகளையும், தாய் அல்லது தந்தை மட்டும் இருக்கின்ற குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற எண்ணத்தின் அடிப்படையில் உருவானதுதான், ‘அன்புக் கரங்கள்’ திட்டம். முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ள 6,082 குழந்தைகளுக்கு பள்ளிப் படிப்பு உட்பட 18 வயது வரை கல்வியை தொடர இந்த உதவித் தொகை, அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பின்னர், அவர்களுக்கு கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எல்லோரும் படித்து முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம். மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக, அரசியல்வாதியாக உயர்ந்து சமூகத்துக்கு நீங்கள் சேவையாற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, பெற்றோரை இழந்து 12-ம் வகுப்பு முடித்து பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள 1,340 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் முதல்வர் வழங்கினார்.
விழாவில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, தலைமைச் செயலர் முருகானந்தம், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சமூக நல இயக்குநர் எம்.எஸ்.சங்கீதா, தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.