திண்டுக்கல்: சிறுபான்மை மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருப்பது அதிமுகதான், என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் ரத்ததான முகாம் திண்டுக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
ரத்ததான முகாமை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விசுவநாதன் ஆகியோர் துவக்கிவைத்தனர். கட்சி பிரமுகர்கள் ரத்ததானம் வழங்கினர். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ”தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நூற்றுக்கு நூறு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பது, மது விற்பது, கற்பழிப்பது நாளுக்கு நாள் நடந்து கொண்டே இருக்கிறது. முதலமைச்சர், அமைச்சர்கள் தான் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என கூறுகின்றனர்.
போர் வீரர்களை எங்களது கண் இமைகளாகக் கருதுகிறோம். உயிர் தியாகம் செய்து நாட்டை காக்கின்ற வீரர்களை மதிக்கிறோம், போற்றுகிறோம், வணங்குகிறோம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இதுதான் எங்கள் கருத்து. சிறுபான்மை மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் உறுதுணையாக இருப்பது அதிமுக தான்,” என தெரிவித்தார்.