பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 5 ஆண்டுகளாக அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் அவதியுற்று வரும் பொது மக்கள் வெங்கல் ஊராட்சியில் புதிய துணைமின் நிலையம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்துக்கு உட்பட்ட பெரியபாளையம் அருகே உள்ள வடமதுரை கிராமத்தில் பெரியபாளையம் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இருந்து, பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சுமார் 40 கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வாறு விநியோகம் செய்யப்பட்டு வரும் மின்சாரம்,பெருகி வரும் குடியிருப்பு பகுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு போதுமானதாக இல்லாததால், அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது என பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டு கின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்ததாவது: பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து, சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், ஜனப்பன்சத்திரம் முதல் பாலவாக்கம் வரை, கொரட்டூர் -பெரியபாளையம் சாலையில் வடமதுரையில் இருந்து, பாகல்மேடு வரை சுமார் 40 கி.மீ., தூரத்துக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த மின் விநியோகத்தால், தண்டலம், பெரிய பாளையம், கன்னிகைப்பேர், மஞ்சங்காரணை, வெங்கல் உள்ளிட்ட 40 கிராமங்களில் வசிக்கும் சுமார் 60- ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல், ஜனப்பன் சத்திரம், கன்னி கைப்பேர், வெங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிறுவனம், பிளைவுட் தயாரிப்பு நிறுவனம், காற்றாலைக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் 30-க்கும் மேற்பட்ட சேமிப்பு கிடங்குகள் என, 50-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள், சேமிப்பு கிடங்குகளுக்கு தேவையான மின் தேவையை பெரியபாளையம் துணை மின் நிலையம் பூர்த்தி செய்து வருகிறது.
இந்நிலையில், பெருகி வரும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங் களுக்கு, பெரியபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லை.இதனால்,கொரட்டூர் பெரியபாளையம் சாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள வெங்கல்,செம்பேடு, காதர்வேடு, பாகல்மேடு, புன்னப்பாக்கம், அத்தங்கிகாவனூர், மாம்பலம், அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கடந்த 5 ஆண்டுகளாக நாள் தோறும் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது.
இந்த அறிவிக்கப்படாத மின் வெட்டு, கோடைகாலங்களில் நாள்தோறும் 5 முறைக்கு மேல் ஏற்படுவதோடு, குறைந்த அழுத்த மின் விநியோகமும் உள்ளது. மற்ற காலங்களில், நாள்தோறும் 2 அல்லது 3 முறை அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், பெரியபாளையம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 40 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட மின் கம்பங்கள், வலுவிழந்து உள்ளன. இதனால், அவ்வப்போது குறிப்பிட்ட பகுதிகளில் மின் வெட்டு ஏற்படுகிறது. மேலும், மின் மாற்றி, மின் பாதைகளில் ஏற்படும் பழுதை நீக்க பெரியபாளையம் பகுதிகளில் உள்ள மின் வாரிய அலுவலங்களில் போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தால், உடனடியாக பழுதை நீக்கி மின்சாரம் வழங்க காலதாமதமாகிறது.
இப்படி அறிவிக்கப்படாத மின் வெட்டு, குறைந்த அழுத்த மின்சார விநியோகம் உள்ளிட்ட காரணங்களால் முதியவர்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே, வெங்கல், செம்பேடு, பாகல்மேடு, அத்தங்கிகாவனூர், அழிஞ்சிவாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு சீரான மின் விநியோகம் செய்யும் வகையில், வெங்கல் ஊராட்சி யில் புதிய துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைவைத் தும் பலனில்லை.
புதிய துணை மின் நிலையம் அமைக்க மத்திய அரசின் உதய மின் திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 ஆண்டுகளாகியும் வருவாய்த்துறை போதிய இடம் ஒதுக்கீடு செய்யாததால் துணை மின் நிலையம் அமைக்கப் படவில்லை என, மின் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, இனியாவது புதிய துணை மின் நிலையம் அமைக்க மின் வாரிய அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.