சென்னை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின்போது பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதாக, போலீஸார் மீதான குற்றச்சாட்டு குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்க உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சென்னை மாநகராட்சி 5-வது மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்மைப் பணிகளுக்கான பொறுப்பை தனியாரிடம் ஒப்படைத்ததை எதிர்த்து தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் அப்புறப்படுத்தியபோது பெண் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 12 வழக்கறிஞர்களை போலீஸார் தாக்கியதாகக் கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி போலீஸார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதால், ஒருநபர் ஆணையம் தொடர்பான உத்தரவை மற்றொரு அமர்வு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், வழக்கறிஞர்களை போலீஸார் தாக்கியது தொடர்பான பொதுநல வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நடந்தது. அப்போது இந்த விவகாரத்தில், ஒருநபர் ஆணையம் அமைத்தது தொடர்பான வழக்கும் சேர்த்து விசாரிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆர்.சங்கரசுப்பு, ஆர்.கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகி, “இது தொடர்பாக விசாரிக்க ஒருநபர் ஆணையம் அமைத்து ஏற்கெனவே விசாரித்த முதல் அமர்வு உத்தரவிட்டது. ஆனால், எங்களுக்கு எந்தவொரு நோட்டீஸும் கொடுக்காமல் அந்த வழக்கை விசாரித்த இரண்டாவது அமர்வு, ஒருநபர் ஆணையத்தின் விசாரணையை நிறுத்தி வைத்துள்ளது” என்றனர்.
அதற்கு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, “மனுதாரர்கள் தங்களது கோரிக்கையில் ஒருநபர் ஆணையம் அமைக்க வேண்டும் என கோராதபோது, அரசு தரப்பில் விளக்கம் கோராமல் அப்போதைய அமர்வு ஒருநபர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. அப்படியே அமைப்பதாக இருந்தாலும் வேறு ஒருவர் தலைமையில் ஆணையம் அமைக்கலாம்” என்றார்.
அப்போது நீதிபதிகள், நடந்த சம்பவம் குறித்து இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் புகார் கூறிக்கொண்டே சென்றால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது. ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தை கண்டு ஏன் தமிழக அரசு அச்சப்பட வேண்டும். எனவே, இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தனது விசாரணையை தொடங்கலாம் என உத்தரவிட்டு விசாரணையை அக்.10-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.