காஞ்சிபுரம்: பெண்களின் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை மூத்த அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி வரவேற்றார்.
அம்மனை தரிசித்துவிட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மார்ச் மாதத்திலேயே உடல் நலம் குன்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அனைவருக்கும் தெரியும். அவர் நாட்டுக்கு சிறந்த சேவை செய்துள்ளார். மேற்கு வங்க ஆளுநராகவும் இருந்துள்ளார்.
தற்போது உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜினாமா செய்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் தகராறு ஏற்படுகிறது. அதில் ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை ஒரு தலைபட்சமாக நடக்கக் கூடாது. அந்தப் பெண் திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் ஒரே காரணத்துக்காக ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளதாக கூறுகின்றனர்.
அந்தப் பெண், ஆட்டோ ஓட்டுநரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்.
எங்கள் கூட்டணிக்குள் எந்த குழப்பமும் இல்லை. திமுக அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளோம். திமுக கூட்டணி உடைவதற்கான அறிகுறி தென்படுகிறது.
தேர்தல் வரலாற்றில் திமுகவுக்கு ஒரு மோசமான தேர்தலாக 2026 சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும். பெண்களின் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சி என எல்லாவற்றிலும் திமுக அரசு கோட்டைவிட்டுள்ளது. களத்தில் திமுகவின் தோல்வி தெளிவாகத் தெரிகிறது என்றார். இந்த சந்திப்பின்போது காஞ்சிபுரம் மாவட்ட பாஜக தலைவர் ஜெகதீசன் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.