நாகர்கோவில்: தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து விவாதிக்க சட்டப்பேரவை சிறப்பு அமர்வு நடத்தப்பட வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணை தலைவர் வாசுகி வலியுறுத்தினார்.
மாதர் சங்கத்தின் 17-வது மாநில மாநாடு வருகிற செப்டம்பர் 24 முதல் 27 வரை குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று நாகர்கோவிலில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் வாசுகி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், “அண்மையில் குமரி மாவட்டத்தில் ஜெமிலா, திருப்பூரில் ரிதன்யா வரதட்சணை மரணங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன. வரதட்சணையை தடுப்பதற்கு புதிய சட்டம் தேவை என மாதர் சங்கம் வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்து அரசியல் கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.
திரைப்பட கலைஞர்கள் தங்கள் ரசிகர்கள் வரதட்சணை வாங்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். சிறார் பாதுகாப்பு அணையர் நீண்ட காலமாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பணியை அலுவலகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் மாநிலம் முழுவதும் சென்று விசாரணை நடத்த வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகளை தடுக்க சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வு நடத்தி விவாதிக்க வேண்டும். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெண்கள் அமைப்புகளை அழைத்துப் பேசி செயல்திட்டம் உருவாக்க வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான தாக்குதலுக்கு எதிராக எங்களைப்போன்ற அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. அரசு தரப்பிலும் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவை. பெண் வீட்டாரே பெண்ணைக் கொல்லும் அளவுக்கு சாதி ஆணவம் உள்ளது. ஆணவக் கொலைகளை தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது என்கிற தமிழக முதல்வரின் நிலைப்பாடு சரியல்ல.
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பெண்கள் குறித்தும், மாதர் சங்கம் குறித்தும் கடுமையாக பேசி வருகிறார். விஜயலட்சுமி பாதிக்கப்பட்ட பெண் என்கிற முறையில் ஜனநாயக மாதர் சங்கம் அவருக்கு உதவுகிறது. ரிதன்யா மரணத்தின்போது மாதர் சங்கத்தினர் குடித்துவிட்டு ஓய்வெடுக்கச் சென்றார்களா என கேட்கிறார் சீமான். முதன் முதலாக ரிதன்யா வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தது மாதர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுமாகும். திருப்பூரில் வலுவான ஒரு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
இந்த உண்மைகளை மறைத்து ஒரு அரசியல் கட்சி தலைவர் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கிறார். சீமானை கண்டித்து 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. எனவே சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். தவெக தலைவர் விஜய் மக்கள் பிரச்சினைகளை அறிந்துகொண்டு, அவற்றில் தலையிடாமலே ஆட்சிக்கு வந்து தீர்வு காண்பேன் என்கிறார். அவரிடம் அதற்கான மந்திரக்கோலா உள்ளது. பாதிக்கப்படும் பெண்களின் பிரச்சினைகளில் என்ன தலையீடு செய்துள்ளார் விஜய்.
நுண்நிதி நிறுவனங்களின் நெருக்கடியால் பல பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். அதை தடுக்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மசோதா கொண்டு வந்தார். அதன்மீது சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்களும், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தெரிவித்த திருத்தங்களும் இடம்பெறாமலே சட்டமாகி விட்டது. அதை மறுபரிசீலனை செய்து மசோதா மீது தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள் இணைக்கப்பட வேண்டும்.
படிப்படியாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இப்போது புதிது புதிதாக குடிநோயாளிகள் உருவாகி வருகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதோடு குடும்பங்களுக்கு வேலையும், மறுவாழ்வும் அளிக்க வேண்டும். போதைக்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை நடத்தப்பட வேண்டும்.
பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை போன்றவற்றை அடிப்படை ஆதாரமாக கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சுமார் 85 லட்சம்பேர் வாக்களிக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சிறுபான்மையினரை வாக்களிப்பதிலிருந்து விலக்கும் இத்தகு நடவடிக்கைகளை மாதர் சங்கம் எதிர்க்கிறது” என்றார்.
மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் ராதிகா கூறுகையில், “சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாடு மார்த்தாண்டத்தில் செப்டம்பர் 24 அன்று பேரணியுடன் துவங்கி 25,26,27 ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 41 மாவட்டங்களில் இருந்து 580 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். அதையொட்டி தமிழகம் முழுவதும் 17 கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன” என்றார். பேட்டியின்போது மாதர்சங்க மாநில துணை தலைவர் உஷாபாசி, மாவட்ட செயலாளர் ரெகுபதி ஆகியோர் உடனிருந்தனர்.