சென்னை: ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டதைப் போல, இணையதளங்களில் பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பதிவேற்றம் செய்வதை, ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் தடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக டி.ஜி.பி.-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இணையதளங்களில் பகிரப்பட்ட தனது அந்தரங்க வீடியோக்களை அகற்ற கோரி பெண் வழக்கறிஞர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இன்னும் 8 இணையதளங்களில் தொடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆன்லைன் பண மோசடிகளை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் சைபர் கண்காணிப்பு நடைமுறை தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெண்களுடைய ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை உடனடியாக கண்டறிந்து தடுக்கும் வசதியை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 8 இணையதளங்களில் பகிரப்பட்டு வரும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோவை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், ஆன்லைன் பணமோசடிகளை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தும் சைபர் கண்காணிப்பு நடைமுறையை, பெண்களின் அந்தரங்கள் வீடியோக்கள் பகிரப்படுவதை உடனடியாக தடுக்கவும் பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.