நாகர்கோவில் மாநகரின் போக்குவரத்து மிக்க பகுதியான வேப்பமூடு சந்திப்பில் வாகன நெருக்கடி மிக்க சாலையின் கீழ் பகுதியில் இருந்த பெட்ரோல் டேங்க்கை முழுமையாக நிரப்பாமல் சாலை அமைக்கப்பட்டதால் ஆபத்து நிகழுமோ என்ற அச்சம் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் எழுந்த இந்த சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் அதிக போக்குவரத்து மிக்க நாகர்கோவில் மாநகரில் முக்கிய பகுதியாக வேப்பமூடு சந்திப்பு உள்ளது. வேப்பமூடு சந்திப்பில் சர்.சி.வி.ராமசாமி பூங்கா அருகே 50 ஆண்டுகளுக்கு மேலாக பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வந்தது. நாகர்கோவில் நகராட்சியாக இருந்தபோது போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 2017-ம் ஆண்டு அப்போதைய நகராட்சி ஆணையர் சரவணகுமார் முக்கிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினார்.
தொடர்ந்து அதே ஆண்டு ஜூலை மாதம் வேப்பமூடு சந்திப்பில் சாலையை விரிவாக்கம் செய்யும் வகையில் அங்கிருந்த பெட்ரோல் பங்க் அப்புறப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குரத்து நெரிசல் குறைந்துள்ளது.
மூடப்படாத பெட்ரோல் டேங்க்: 8 ஆண்டுகள் கடந்த பின்னர் தற்போது அந்த பகுதியில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்ற சர்ச்சை வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதாவது, தினமும் ஆயிரக்கணக்கான கார், பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் இவ்வழியாக சென்று வரும் நிலையில், 2017-ம் ஆண்டு அவசர கதியில் சாலையின் கீழ் பகுதியில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் டேங்க்கை முறையாக அகற்றாமல் மூடி தார் போட்டு சமப்படுத்தி விட்டதாக வாகன ஓட்டிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
அவ்வாறு டேங்க் சரிவர மூடப்படாமல் இருந்தால் வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பகுதியான அங்கு இடிபாடு ஏற்பட்டு பெரும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது. எனவே. இதை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி, அச்சத்தை நிவர்த்தி செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து நாகர்கோவிலை சேரந்த சமூக ஆர்லர் ஜேயின் ஷாஜி என்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பிய மனுவில், ‘வேப்பமூடு சந்திப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பெட்ரோல், டீசல் டேங்க்கை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.
மாநகராட்சி கடிதம்: இதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா குமரி மாவட்ட புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இயங்கி வந்த பெட்ரோல் பங்க் மாநகராட்சி நிர்வாகத்தால் 2017-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அங்கு எரிபொருள் சேமித்து வைக்கும் தொட்டி அகற்றப்படாமல் அதன்மீது நெடுஞ்சாலைத் துறையால் சாலை அமைக்கப்பட்டு 7 ஆண்டுகளாகி விட்டதாகவும், இச்சாலையில் பேருந்துகளும், கனரக வாகனங்களும் அதிகம் சென்று வருவதால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும், எனவே டேங்க்கை அகற்றிடுமாறும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதேநேரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளான பின்னரும் இதுவரை வாகன போக்குவரத்து பாதிப்பின்றி நடந்து வருகிறது. எனவே, வேப்பமூடு சந்திப்பில் பெட்ரோல் பங்க் இருந்த இடத்தில் பொதுமக்களுக்கு ஏதேனும் ஆபத்து உள்ளதா? என ஆய்வு செய்து விவரம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால், இதுவரை அதற்கான ஆய்வறிக்கை வரவில்லை. எனவே மக்களுக்கு ஆபத்து உள்ளதா? என ஆய்வு செய்து தாமதமின்றி அறிக்கை வழங்கிட வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
ஆனால் இதன் பின்னரும் வரை வேப்பமூடு சந்திப்பில் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வெளிப்படை தன்மையும் அறிக்கை சமர்ப்பிக்கவில்ல. எனவே பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் வேப்பமூடு சந்திப்பு சாலையின் கீழ் பகுதியில் பெட்ரோல் சேமிக்கும் தொட்டி உள்ளதா ? என்பதை உறுதிப்படுத்தி, வாகன ஓட்டிகளின் சந்தேகத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.