உடுமலை: பெங்களூரில் ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த உடுமலை இளம் பெண் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை விஜிராவ் நகர் குடியிருப்பைச் சேர்ந்தவர் எஸ்.மூர்த்தி. உடுமலை தமிழிசை சங்கத்தின் துணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி எஸ்.ராஜலட்சுமி. உடுமலை அருகேயுள்ள விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியின் தாளாளராக உள்ளார்.
இவர்களது மகள் எம்.ஆர்.காமாட்சி (29). கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா கல்லூரியில் பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் முடித்த இவர், பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் அனலிஸ்டாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணிக்கான வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதைக் காண தோழியுடன் சென்ற காமாட்சி, கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பெங்களூரு விரைந்தனர். நேற்று பகல் 2 மணியளவில் காமாட்சியின் உடல் உடுமலை கொண்டு வரப்பட்டு, மைவாடி பிரிவில் உள்ள பள்ளி வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி எம்.பி. கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், நகைச்சுவை நடிகர் தாமு மற்றும் தனியார் பள்ளித் தாளாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் காமாட்சியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, உடுமலை பொள்ளாச்சி சாலையில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.
இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறும்போது, ‘‘காமாட்சி மிகவும் தன்னம்பிக்கை உடையவர். ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர். கிரிக்கெட் வெற்றிக் கொண்டாட்டத்தை தோழிகளுடன் காணச் சென்றபோது உயிரிழந்த நிகழ்வு, அவரது பெற்றோருக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது’ என்றனர்.