திருவள்ளூர்: “அதிமுக கூட்டணியில் இருப்பதால் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய துடிக்கிறது திமுக அரசு” என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சீர்கேட்டுள்ளதாக கூறி இன்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையிலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரமணா முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்பி கோ.அரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், திருவள்ளூர் சி.வி.என். சாலையில் உள்ள ராஜம்மாள் தேவி பூங்காவில் அரசு விதியை மீறி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது; நகராட்சி பகுதிகளில் தரமற்ற சாலைகள் போடப்பட்டுள்ளது; குப்பை முறையாக அகற்றப்படாமல் உள்ளது; பாதாளச் சாக்கடை வழியாக செல்லும் கழிவுநீர் சுத்திகரிக்கப் படாமல் வெளியேறுகிறது, தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது; வீட்டு வரி நிர்ணயம் செய்வதில் அரசு விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து கண்டன முழக்கம் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசுகையில், “அதிமுக கூட்டணியில் இருப்பதால் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய துடிக்கிறது திமுக அரசு” என்று கூறினார்.