சென்னை: “தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், புரவிபாளையம் கிராமத்தில் கே.டி.செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்தி வருகிறார். இவரது குவாரிகளில் விதிமீறல் உள்ளது என ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின் படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கையில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கபட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த கோவை சப்-கலெக்டர், குவாரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுத்ததாக கூறி செந்தாமரைக்கு 32 கோடியே 29 லட்சத்து 77 ஆயிரத்து 792 ரூபாய் அபராதம் விதித்து 2022-ம் ஆண்டு உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த கமிஷனர், சப்-கலெக்டர் உத்தரவை ரத்து செய்தார். அபராதத் தொகையை ரூ.2 கோடியே 48 லட்சத்து 9 ஆயிரத்து 119 ஆக குறைத்து, அதில் ரூ.25 லட்சத்தை உடனடியாக செலுத்த வேண்டும். மீதத் தொகையை மாதம் ரூ.8 லட்சம் வீதம் தவணை முறையில் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கிடையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனரின் உத்தரவை, தாமாக முன்வந்து இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் விசாரித்தார். கமிஷனர் உத்தரவை ரத்து செய்தும், கோவை சப்-கலெக்டர் விதித்த அபராதத் தொகையை உறுதி செய்தும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தாமரை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி விசாரித்தார். அப்போது, அனைத்து விதமான சுற்றுச்சூழல் அனுமதிகளையும் பெற்ற பின்னரே குவாரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதில் எந்த விதிமீறலும் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் கூடுதல் அரசு பிளீடர் ஆஜராகி, அபராத தொகையை குறைத்து புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனரின் உத்தரவு எந்த வகையிலும் ஏற்க முடியாதது. அதை ரத்து செய்தது அரசு துறை செயலாளர் உத்தரவு சரியான முடிவு. மனுதாரருக்கு குவாரியை நடத்த உரிமை எதுவும் இல்லை. சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை அவரிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், சம்மந்தப்பட்ட குவாரிகளில் இருந்து கற்கள், கிராவல் மண் எவ்வளவு எடுக்கப்பட்டுள்ளன? என்ற அட்டவணையே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அட்டவணையில் உள்ள விவரங்களை மனுதாரர் எதிர்க்கவில்லை. மனுதாரருக்கு 5 குவாரிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
அதில் முறையான உரிமம் இல்லாமல் கற்களும், கிராவல் மண்ணும் எடுத்துள்ளார். இந்த குற்றத்துக்காக அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கும் வகையில் சட்டப்பிரிவுகள் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் மனுதாரருக்கு எதிராக புகார் அறிக்கையை அரசு அதிகாரிகள் தாக்கல் செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட கனிம வளத்துக்கு இணையான தொகையை சம்மந்தபட்டவர்களிடம் இருந்து வசூலிப்பதில் எந்த சமரசமும் இருக்கக்கூடாது. 100 சதவீத தொகையை வசூலிக்கவேண்டும். அதன்படி கோவை சப்-கலெக்டர் சரியான அபராதம் விதித்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே, நேர்மையற்ற பேராசைக்காரர்களிடம் இருந்து பூமித்தாயை காப்பாற்றுவதற்காகத்தான் கொண்டு வரப்பட்டது. ஆனால், தீராத பேராசைக்காரர்களான குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றனர்.
ஆனால், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய அந்த துறை கமிஷனரின் இந்த செயல் அதிர்ச்சி அளிக்கிறது. அவருடைய உத்தரவு மனசாட்சி உள்ள ஒருவரால் புரிந்துக் கொள்ளவும், கற்பனை செய்யவும் முடியாத அளவில் உள்ளது. அவரது உத்தரவு மக்களையும், அரசையும் ஏமாற்றும் விதமாகவும், மோசடியாகவும் உள்ளது.
அதுமட்டுமல்ல, உயர் நீதிமன்ற பொதுநல வழக்கு விசாரணையின்போது, குவாரியை மூடி விட்டதாக அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்து விட்டு, மறுபுறம் குவாரியை செயல்பட அனுமதித்துள்ளனர். இதன்மூலம், இந்த உயர் நீதிமன்றத்தையும் அதிகாரிகள் ஏமாற்றியுள்ளனர்.
எனவே, சட்டப்படி ஒட்டுமொத்த அபராத தொகையையும் மனுதாரரிடம் இருந்து அரசு வசூலிக்க வேண்டும். மனுதாரரின் குவாரி உரிமம் 2023-ம் ஆண்டே முடிந்து விட்டதால், அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் எடுத்துள்ள நடவடிக்கையை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.
இந்த குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை மூலம் தமிழ அரசு விசாரணை நடத்த வேண்டும். பின்னர், அவர்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது குற்றவியல் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நீதிபதி பரத சக்கரவர்த்தி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.