சென்னை: புழல் சிறை வளாகத்தில் உள்ள கோழிப் பண்ணையில், கடந்த 4 நாட்களில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. அவைகள் பறவை காய்ச்சல் தொற்றால் உயிரிழந்ததா? என மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறைகளில் உள்ள கைதிகளுக்கு வாரத்துக்கு இருமுறை கோழி இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. இதற்கு தேவையான கோழிக் கறியை சிறை கைதிகளே உற்பத்தி செய்து கொள்வதற்காக, தமிழகத்தில் உள்ள சிறைகளில் தமிழ்நாடு சிறைத்துறை சார்பில், கைதிகளால் கோழிப்பண்ணை அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
இந்த கோழிகள் சிறை கைதிகளுக்கு போக, எஞ்சியவை பொது மக்களுக்கும் விற்பனையும் செய்யப்படுகிறது. அந்த வகையில், புழல் மத்திய சிறையில் கோழிப்பண்ணை உள்ளது.
உடற் கூராய்வுக்கு அனுப்பிவைப்பு: இந்த பண்ணையில் கடந்த 4 நாட்களில் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளன. பறவை காய்ச்சல் காரணமாக கோழிகளின் இறப்பு ஏற்பட்டதாகவும், இந்த காய்ச்சல் சிறை கைதிகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும் அச்சம் எழுந்தது.
இந்த விவகாரம் குறித்து, தற்போது உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புழல் சிறை வளாகத்தில் உள்ள பண்ணைகளில் கோழிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. அவற்றை கைப்பற்றி உடற் கூராய்வுக்கு, தமிழ்நாடு காவல்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
ஆய்வின் முடிவில் கோழிகள் இறப்புக்கான காரணம் தெரியவரும். மேலும், கைதிகளுக்கு எந்த தொற்றும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவர்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவை தவிர, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.