சென்னை: புளித்துப் போன நாடகங்கள் விடுத்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்: “வாழ்வாதாரத்தை உறுதி செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 12 நாள்களுக்கும் மேலாக போராடியத் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத, அவர்கள் மீது நள்ளிரவில் அடக்குமுறையை கட்டவிழ்த்த்து விட்ட கொடுங்கோல் ஆட்சி நடத்தும் முதல்வர் ஸ்டாலின், இப்போது தூய்மைப் பணியாளர்களின் ஆபத்பாந்தவனாக வேடம் தரித்து நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் கூட முதல்வர் இரட்டை வேடம் போடுவது கண்டிக்கத்தக்கது.
சென்னையில் போராடிய தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்தக் கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை; நியாயமானவை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்குங்கள்; சென்னை மாநகரப் பகுதிகளில் குப்பை அள்ளும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்காமல் மாநகராட்சி வாயிலாகவே மேற்கொள்ளச் செய்யுங்கள் என்பன தான் அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் ஆகும். இவற்றை நிறைவேற்றுவதில் சென்னை மாநகராட்சிக்கும், தமிழக அரசுக்கும் எந்த தடையும் இல்லை.
ஆனால், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதை விட, இரு மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள தனியார் நிறுவனத்திற்கு ரூ.2,300 கோடி மக்கள் வரிப் பணத்தை வாரி இறைப்பதையே முக்கியம் என்று கருதியதால் தான்அவர்களின் கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வில்லை. முதல்வர் எங்கு சென்றாலும், அவரது மனம் கோணாதவாறு, அவருக்கு முன்பாகவே அந்த இடங்களுக்குச் சென்று தூய்மைப் பணிகளை செய்பவர்கள் இந்தப் பணியாளர்கள் தான். ஆனால், அவர்கள் 12 நாள்களாக சரியாக உண்ணாமல், உறங்காமல் நடை பாதைகளில் தங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அவர்களை முதல்வர் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மாறாக, காவல்துறையை ஏவி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டவர் முதல்வர் ஸ்டாலின்.
தூய்மைப் பணியாளர்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளால் தமது அரசின் கோர முகம் அம்பலமாகி விட்டதையறிந்த முதல்வர் ஸ்டாலின், அதை மறைப்பதற்காக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்காக சில திட்டங்களை அறிவித்திருக்கிறார். தூய்மைப் பணியாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அமைத்தும் அடித்தட்டு மக்கள் என்ற வகையில் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கக் கூடியவை தான். ஆனால், புதிதாக ஏதோ சலுகை வழங்குவதைப் போல முதல்வர் மாயையை ஏற்படுத்த முயல்கிறார்.
தூய்மைப் பணியாளர்கள் கோருவதைப் போல அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டு, அதற்கான ஊதியமும் வழங்கப்பட்டால், அவர்கள் அரசால் வழங்கப்படும் இலவச காலை உணவுக்காக கையேந்தி நிறக்த் தேவையில்லை. அவர்களின் தேவைகள் அனைத்தையும் அவர்களே நிறைவேற்றிக் கொள்வார்கள். அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கை கிடைக்கும். ஆனால், அதை செய்யாத முதல்வர், தூய்மைப் பணியாளர்கள் எப்போதும் தங்களிடம் கையேந்தி நிற்க வேண்டும் என்று நினைப்பதால் தான், அவர்களின் உரிமைகளை மறுத்து விட்டு, சலுகைகளை வழங்குவதைப் போல நாடகமாடுகிறார்.
இதை விட மோசமான நாடகம் என்னவென்றால், முதல்வர் அறிவித்த நலத்திட்டங்களைத் தாங்கள் வரவேற்பதாக கூறி தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்ததாக செய்யப்பட்ட ஏற்பாடு தான். நிலையக் கலைஞர்களை வைத்து ஆட்சியாளர்களுக்கு நன்றி கூறச் செய்வதெல்லாம் கலைஞர் காலத்திலிருந்து நடத்தப்பட்டு வரும் புளித்துப் போன நாடகங்கள் தான். அவற்றை மீண்டும், மீண்டும் அரங்கேற்றுவதை விடுத்து, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வாழ்வில் உண்மையான மகிழ்ச்சியை ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்” என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.