சென்னை: குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் புலனாய்வு அதிகாரிகள் பிறமாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் அதிகாரம் டிஜிபி-க்கு வழங்கப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடைபெறாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
குறிப்பாக டிஜிட்டல் கைது, இணையதள மோசடிகள், ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் போலீஸாருக்கு சவால் விடும் வகையில் உள்ளது. இவ்வகை மோசடிக்காரர்கள் வெளிமாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருந்தவாறு பொது மக்களிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை நொடியில் பறித்து விடுகின்றனர்.
இந்தவகை குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை (புலனாய்வு) அதிகாரிகள் வெளிமாநிலம் செல்ல வேண்டியது உள்ளது. ரயில் அல்லது பேருந்துகளில் பயணித்தால் அதிக நேரம் செலவாகும். சைபர் க்ரைம் மோசடியில் 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்குள் மோசடிக்காரர்கள் ஒரு வங்கி கணக்கிலிருந்து அடுத்த வங்கி, அதற்கு அடுத்த வங்கி என மாற்றம் செய்து அனைத்து பணத்தையும் மோசடி செய்து விடுகின்றனர்.
அவர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றால் விசாரணை அதிகாரிகள் விமானத்தில் செல்ல வேண்டும். அதற்கான பயண கட்டணம் அனுமதியை டிஜிபி வழங்க முடியாது. அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு காலதாமதமாகும். இந்த தாமதம் குற்றவாளிகளுக்கு உதவியாகி விடுகிறது.
இதை தடுக்கும் வகையில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்காக பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கும் அதிகாரம் டிஜிபிக்கு வழங்க வேண்டும் என டிஜிபி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு, அதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் 29-ல் அறிவிப்பு வெளியிட்டார்.
இதையடுத்து, பிற மாநிலங்களுக்கு புலனாய்வு அதிகாரிகள், குற்றவாளிகளை கைது செய்யும் வகையில் விமானத்தில் பயணம் மேற்கொள்ள டிஜிபியிடம் அனுமதி பெற்றால் போதும் என்ற உத்தரவு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. சைபர் க்ரைம், பொருளாதார குற்றங்கள் தொடர்புடைய குற்றவாளிகள் மட்டும் அல்லாமல் கொலை, கொள்ளை, வழிப்பறி கொள்ளையர்கள் கூட சில நேரங்களில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து கைவரிசை காட்டிவிட்டு தப்பி விடுகின்றனர். அவர்களை விரைந்து, விமானத்தில் சென்று கைது செய்யவும் இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.