மதுரை: புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதாரங்களால் முறியடிக்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணா கூறினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) சார்பில் சிந்துவெளி நாகரிகம் உலகுக்கு அறிவிக்கப்பட்ட நூற்றாண்டு நிறைவு கருத்தரங்கம் மதுரை விராட்டிபத்தில் நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சிந்துவெளி ஆய்வாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பேசியதாவது: கடவுள் நாகரிகத்தை படைக்கவில்லை. மனிதர்கள்தான் நாகரிகத்தை படைத்துள்ளனர். தற்போது நாகரிகம் பற்றிய புனைவுக் கதைகளைத்தான் வரலாறாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆதாரங்கள் அடிப்படையில் கட்டமைக்கப்படுவதுதான் வரலாறு. கீழடி அகழாய்வு குறித்து இன்னும் முழுமையான அறிக்கையை நான் அளிக்கவில்லை. அதற்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் மணலூர் கீழடியை மகாபாரதத்தை தொடர்புபடுத்தி புனைவு நூலாக்கியுள்ளனர்.
புனைவு வரலாற்றை தொல்லியல் ஆதார வரலாற்றால் முறியடிக்க வேண்டும். வரலாற்றை புனைவுகளோடு கட்டமைக்கலாம். அதை தொல்லியல் சான்றாககட்டமைக்க முடியாது. சங்க இலக்கியங்கள் மனித இலக்கியங்களை பேசும் மகத்தான இலக்கியங்களாகும். கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்ற வேண்டும் என்றனர், அதை மறுத்து விட்டேன். கீழடி அறிக்கை வெளிவராததால், அந்த வரலாற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியவில்லை.
காஞ்சிபுரத்தில் சென்னை பல்கலைக்கழக மாணவர்களால் 1975-82-ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் அகழாய்வு செய்த அறிக்கையை இன்னும் முழுமையாக வெளியிடவில்லை. தமிழகம் முழுவதும் கிடைத்த கருப்பு சிவப்பு நிற பானை ஓடு காஞ்சிபுரத்தில் மட்டும் கிடைக்காதது முக்கிய செய்தி. அதற்கு காரணம் காஞ்சிபுரம் சங்க கால நகரம் கிடையாது. மக்களுக்கு தெரியப்படுத்தியதால்தான் கீழடி வாழ்ந்து கொண்டிருக்கிறது.
அகழாய்வு குறிப்புகள்…காஞ்சிபுரம் பற்றிய அறிக்கை வந்திருந்தால் வரலாற்று பார்வை மாறியிருக்கும். மொழியை காப்பாற்றிக் கொண்டு வாழ்பவர்கள் தமிழர்கள். இன்று வரை சங்க இலக்கியங்களை தொல்லியல் எச்சங்களோடு ஒப்பிடவில்லை. புனைவுகள் வரலாறு ஆகாது. தமிழகத்தின் பல அகழாய்வு குறிப்புகள் மக்களுக்கு சென்று சேரவில்லை. சேர்ந்தால்தான் வரலாற்றின் உண்மைத்தன்மை புரியும். இவ்வாறு அவர் பேசினார்.