மதுரை: மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புனரமைப்பு பணிகள் நிறைவடையும் நிலையில், அக்டோபரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம், அதன் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில், ரூ.50 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளையும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இப்பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்தேன். அக்டோபர் மாதம் இறுதியில் பணிகள் அனைத்தும் நிறைவுற்று மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக காந்தி நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படும்,’ என்றார்.
ஆய்வின்போது, மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, மதுரை மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ் சாலையிலுள்ள அரசு அச்சகத்திலும், காந்தி மியூசியம் அருகிலுள்ள தமிழ் காட்சிக் கூடத்தையும் பார்த்து ஆய்வு செய்தார். மதுரை உலகத் தமிழ் சங்கக்காட்சிக் கூடத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் ராஜாராமன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் .பூமிநாதன், உலகத் தமிழ்ச் சங்கம் தனி அலுவலர் முனைவர். அவ்வை அருள், உலகத் தமிழ் சங்க துணைத் தலைவர் – இயக்குநர் முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் எம்எல்ஏக்கள் கோ. தளபதி , பூமிநாதன், அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.