சென்னை: புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஐடிஎன்டி மையம் மூலம் தொழில் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை உலகின் முதல் 10 புத்தாக்க மையங்களில் ஒன்றாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் (ஐடிஎன்டி ஹப்) கடந்த 2023-ல் உருவாக்கப்பட்டது. இந்த மையம், வளர்ந்து வரும் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை முன்தொழில் வளர்காப்பகம் (4 வாரகால திட்டம்), தொழில் வளர்காப்பகம் (12 முதல் 18 மாதகால திட்டம்), தொழில் மேம்பாட்டு திட்டங்கள் (16 வாரகால திட்டம்) மூலம் ஊக்குவித்து வருகிறது.
பயிற்சி பட்டறைகள்: அந்தவகையில், தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வணிக ஆய்வுகளுக்காக முகாம், வணிக கோட்பாடுகள் மற்றும் புத்தாக்க எண்ணங்களை செம்மைப்படுத்துவதற்காக பயிற்சி பட்டறைகள் முன்தொழில் வளர்காப்பகம் (பேகான்) மூலம் நடத்தப்பட்டு, 57 குழுக்கள் பயிற்சியை முடித்துள்ளன. அதேபோல, புத்தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சரிபார்க்கவும், வளர்த்தெடுக்கவும் தொழில் வளர்காப்பகம் (பாத்ஃபைண்டர்) உதவுகின்றன.
புத்தாக்கம் சார்ந்த தொழில்நுட்பத்தை வளர்க்கும் விதமாக ஆய்வகங்கள், உற்பத்தி வழிகாட்டுதல்கள், நிதி திரட்டுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் தொழில் வளர்காப்பகம், தொடக்க நிலையில் உள்ள 56 புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிபுரிந்து வருகின்றன. சந்தை அணுகல், மூலதனம், தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் உள்ளிட்டவை மூலமாக புத்தொழில் முனைவோரிடையே போட்டித்தன்மையை அதிகரித்தல், முதலீடுகளை ஈர்த்தல், நிறுவனங்களை விரிவாக்குதல் ஆகியவற்றுக்கு தொழில் மேம்பாட்டு திட்டம் (ஐ-ஆசிரலரேட்) உதவுகிறது.
விண்வெளி தொழில்நுட்பம்: இதன்மூலம் 25 வளர்ச்சியடைந்த புத்தொழில் நிறுவனங்கள் பயன்பெறுகின்றன. அதேபோல, டீப்-டெக், ரோபோட்டிக்ஸ், செமி கண்டக்டர், குவாண்டம், செயற்கை நுண்ணறிவு, மெய்நிகர் தொழில்நுட்பம், எலெக்ட்ரானிக் வாகன உற்பத்தி, விண்வெளி தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்டவைகளிலும் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.