புதுச்சேரி: புதுச்சேரி புதிய அமைச்சராக ஜான்குமார், நியமன எம்எல்ஏக்களாக மூவர் இன்று (திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்வை திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் புறக்கணித்தனர்.
புதுவையில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல்வர் உட்பட 4 அமைச்சர்களும், பாஜக தரப்பில் தேர்வானோரில் பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்களாக நமச்சிவாயம், சாய் சரவணக்குமார் ஆகியோர் இருந்தனர். பதவி கிடைக்காத பாஜக எம்எல்ஏக்கள் வாரியத் தலைவர், அமைச்சர் பதவி கோரி வந்தனர். மேலும், அவர்கள் அரசுக்கும், கட்சி மேலிடத்துக்கும் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆட்சி நிறைவு பெறவுள்ள சூழலில் சுழற்சி அடிப்படையில் மற்றொருவருக்கு அமைச்சர் பதவி தர பாஜக தலைமை முடிவு செய்தது. அதேபோல மத்திய அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களையும் மாற்ற முடிவு செய்தது. இதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி பாஜக அமைச்சர் சாய் சரவணக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேநாளில் நியமன எம்எல்ஏக்களாக இருந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக் பாபு ஆகியோரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து பாஜக தரப்பில் காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏ ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோல நியமன எம்எல்ஏக்களாக தீப்பாய்ந்தான், காரைக்காலை சேர்ந்த ராஜசேகர், செல்வம் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டனர்.
மத்திய அரசிடம் இருந்து இதற்கான அனுமதி உடனடியாக கிடைக்கவில்லை. சுமார் 2 வார கால இழுபறிக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை புதிய அமைச்சர், நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி கிடைத்தது. இதையடுத்து இன்று மதியம் புதுவை சட்டப் பேரவையில் உள்ள பேரவைத்தலைவர் அறையில் நியமன எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடந்தது.
பேரவைத் தலைவர் செல்வம், எம்எல்ஏக்களாக தீப்பாய்ந்தான், ராஜசேகர், செல்வம் ஆகியோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து, அவர்களு க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர் நியமன எம்எல்ஏக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனையடுத்து, புதிய அமைச்சர் பதவியேற்பு விழா துணை நிலை ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடந்தது. துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் பதவியேற்பு விழா மேடைக்கு வந்தார். தேசிய கீதம், தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.
தொடர்ந்து தலைமை செயலாளர் சரத் சவுகான், அமைச்சராக ஜான்குமார் நியமிக்கப்பட்டதற்கான மத்திய உள்துறை செயலகத்தின் அனுமதி கடிதத்தை வாசித்தார். இதைத்தொடர்ந்து ஆளுநர் கைலாஷ் நாதன், அமைச்சராக ஜான் குமாருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
பின்னர் பதிவேட்டில் அமைச்சர் ஜான்குமார் கையெழுத்திட்டார். மீண்டும் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது. அமைச்சர் ஜான் குமாருக்கு ஆளுநர் கைலாஷ்நாதன் பூங்கொத்து வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், திருமுருகன் உள்பட எம்எல்ஏ-க்கள், பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக கட்சித் தலைவர்கள், அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். எதிர்க்கட்சியான திமுக, காங்கிரஸ் இப்பதவியேற்பு நிகழ்வுகளை புறக்கணித்தன.
இதனை தொடர்ந்து அமைச்சர் ஜான்குமார் புதுவை சட்டப்பேரவைக்கு வந்தார். அங்கு 2-வது மாடியில் உள்ள அமைச்சர் அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றார்.