சென்னை – புதுடெல்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் ( ஜி.டி.,) விரைவு ரயில் நாளை முதல் மீண்டும் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை ரயில் கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி இடையே இயக்கப்பட்டு வந்த கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி. விரைவு ரயில் (12615), கடந்த ஆண்டு மே மாதம் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டன.
இதையடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்றதால், மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. பின்னர், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புதுடெல்லிக்கு கிராண்ட் டிரங்க் ரயில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த ரயில் நாளை (9-ம் தேதி) முதல் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து புதுடெல்லிக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடப்பதால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் ஜி.டி. ரயில் 3-வது நாள் அதிகாலை 5 மணிக்கு புதுடெல்லியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், புதுடெல்லியில் இருந்து மாலை 4.10 புறப்படும் இந்த ரயில் (12616), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 3-வது நாள் அதிகாலை 4.45 மணிக்கு வந்தடையும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.