புதுச்சேரி: புதுச்சேரியில் மின்துறை தனியார்மயத்தை கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இண்டியா கூட்டணியினர் வந்தபோது தடுத்ததால், தடுப்புகளை தாண்டி குதித்த திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி யூனியன் பிரதேசமான புதுவையில் மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு நாராயணசாமி தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தனியார் மயமாக்கல் ஒத்தி வைக்கப்பட்டது.
அதே நேரத்தில், தனியார்மயத்தை எதிர்த்து புதுவை மின்துறை ஊழியர்கள், பொறியாளர்கள் இணைந்து போராட்டக்குழுவை ஏற்படுத்தி போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அரசு அமைந்தது. அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் மின்துறையை தனியார்மயமாக்க முயற்சிகள் நடந்தது.
இதை எதிர்த்து புதுவை மின்துறை போராட்டக்குழுவினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், மின்துறையை தனியார்மயமாக்கும் வகையில் டெண்டர் விட இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சமீபத்தில் அதானி நிறுவனம் புதுவை மின்துறையின் 100 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாக தகவல் பரவியது. ஆனால், இதை மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் முற்றிலுமாக மறுத்தார். மின்துறை தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது எப்படி அதானி நிறுவனம் வாங்க முடியும்? அதானி நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று அவர் தெரிவித்தார்.
இருப்பினும் இண்டியா கூட்டணி கட்சிகள் மின்துறையை ரகசியமாக அதானி நிறுவனத்துக்கு தாரை வார்த்துவிட்டதாக தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. மின்துறை தனியார்மயமாக்கலை கண்டித்து இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஊர்வலமாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இதற்காக இன்று அண்ணாசாலை, காமராஜர் சிலை சந்திப்பில் இண்டியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடினர். ஊர்வலத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஊர்வலம் நேரு வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி வந்தது. ஊர்வலத்தை போலீஸார் நேருவீதி, கேன்டின் வீதி சந்திப்பில் பேரிகார்டு அமைத்து தடுத்தனர். இதையடுத்து ஊர்வலத்தில் வந்த தலைவர்கள் பேரிகார்டு மீது ஏறி நின்றும், அமர்ந்தும் கோஷம் எழுப்பினர்.
ஒரு கட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், எம்எல்ஏக்கள் பேரிகார்டு தடுப்புகளை தாண்டி குதித்தனர். ஆளுநர் மாளிகை நோக்கி சென்ற அவர்களை போலீஸார் கைது செய்தனர். ஊர்வலம், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், திமுக எம்எல்ஏக்கள் சம்பத், செந்தில்குமார், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கமலக்கண்ணன் உட்பட பலர் கைதானார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட நுாற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.