புதுச்சேரி: பாஜக நிர்வாகி உமாசங்கர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை இன்று தொடங்கியது.
புதுவை கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (35), பாஜக நிர்வாகியான இவர் கடந்த ஏப்ரல் மாதம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத்தோட்டம் பகுதி ரவுடி கருணாவும் அவரது கூட்டாளிகளும் கொலை செய்ததாக கைதானார்கள். இதையடுத்து கருணா உட்பட 11 பேரை லாஸ்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் உமா சங்கர் தந்தை காசிலிங்கம் தனது மகன் கொலையில் அரசியல் பிரமுகர்கள் தொடர்பு இருப்பதாக சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டு சிபிஐ விசாரணை செய்யவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், உமாசங்கர் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ய உத்தரவிட்டார். சிபிஐ அதிகாரிகள் கொலை வழக்கு தொடர்பான கோப்புகளை லாஸ்பேட்டை போலீஸாரிடம் இருந்து பெற்றனர்.
அதைத்தொடர்ந்து சென்னை சிபிஐ டிஎஸ்பி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு விசாரணையை தொடங்கினர். உமாசங்கர் கொலை செய்யப்பட்ட கருவடிக்குப்பம் சாலையில் சம்பவம் நடந்த இடத்தை பார்த்தனர். தொடர்ந்து குயில்தோப்புக்கு சென்றனர். பின்னர் லாஸ்பேட்டை காவல்நிலையத்துக்கு சென்று கொலை வழக்கு விசாரணை செய்த அதிகாரிகளை சந்தித்து பேசினர். வழக்கு தொடர்பான ஆவணங்களையும் பெற்றனர்.
மேலும் இக்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருணா தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் உள்ளார். அவரிடமும், இக்கொலை வழக்கில் கைதானோரிடமும் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.