புதுச்சேரி: மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் இன்று (ஜூலை 9) பந்த் துவங்கியது. கடைகள் அடைக்கப்பட்டு, தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. அதே நேரத்தில், விடுமுறை எடுக்க அரசு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசை கண்டித்தும், 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. இதனையடுத்து புதுச்சேரியில் பந்த் அறிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை பந்த் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் தொடங்கியுள்ளன.
இதன் காரணமாக புதுச்சேரியில் தனியார் பேருந்து ஆட்டோ டெம்போக்கள் ஓடவில்லை. தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திரையரங்குகள், மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளது. சிறிய கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை மூடப்பட்டுள்ளன. பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க கூடாது என அறிவுறுத்தியுள்ள தலைமைச் செயலகம், காலை 11 மணிக்குள் அனைத்து துறைகளிலும் வராதவர்கள் பெயர் பட்டியலை அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இங்கு நடைபெறும் போராட்டத்தில் தொழிற்சங்க தலைவர்கள், இண்டியா கூட்டணி தலைவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதே போல் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு, இந்திரா காந்தி சிலை, சேதராப்பட்டு, மதகடிப்பட்டு, திருக்கனூர், வில்லியனூர் பைபாஸ், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கன்னிய கோவில், காரைக்கால் ஆகிய மையங்களில் மறியல் போராட்டம் காலை நடைபெறுகிறது.
புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- மாதமொன்றிற்கு நிர்ணயம் செய்திட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடக்கிறது.
இதனிடையே போலீஸ் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பந்த் போராட்டத்தை ஒட்டி தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள்,டெம்போக்கள் இயக்கப்படவில்லை. தமிழக மற்றும் புதுச்சேரி அரசின் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன. திண்டிவனம் புறவழிச் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, கடலூர் மற்றும் விழுப்புரம் சாலைகள் வழியாக செல்லும் பேருந்துகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
மேலும், போலீஸ் எஸ்கார்ட் வேனுடன் புதுச்சேரி எல்லை வரை பேருந்துகள் செல்வதற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளை அரசு பேருந்துகளில் ஏற்றி போலீஸார் அனுப்பி வைக்கின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பேருந்து நிலைய வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் நடக்கிறது.