புதுச்சேரி: முன்னாள் முதல்வர் நாராயணசாமி அரசியல் உள்நோக்கத்தோடு துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் ஏதோ கருத்து மோதல் இருப்பது போன்ற செய்தியை கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க மறுக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற பொய்களை எப்போதும் புதுச்சேரி மாநில மக்கள் நம்பமாட்டார்கள், என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் சார்பில் தேசியக்கொடி வெற்றி ஊர்வலம் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (மே 17) நடைபெற்றது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக இந்திய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி இந்திய ராணுவத்தின் பலத்தை உலகத்துக்கு தெரியப்படுத்தினர். அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் விதமாக இந்தப் பேரணி நடந்தது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு தேசியக்கொடி வெற்றி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பேரணியில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ, பல்கலைக்கழகம் துணை வேந்தர் பிரகாஷ் பாபு மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு கையில் தேசியக்கொடியுடன் ஊர்வலமாக சென்றனர்.
பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் கருத்துவேறுபாடுகள் இருப்பதாக கூறியுள்ளார். இதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்.பிரதமர் மோடி ஆசியோடு புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நடந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கட்சிகள் ஒருங்கிணைந்து ரங்கசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசின் ஆதரவோடும், ஒப்புதலோடும் அவர் நிறைவேற்றிக் வருகின்றார்.
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள், சட்டப்பேரவையில் பட்ஜெட்டின்போது அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றிக் கொண்டிக்கின்றார். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில், கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக பிரதமர், பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவோம் என்று சொன்னார். அந்த பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்குவதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு 90 சதவீத வேலைகள், அதற்கான உத்தரவாதங்கள் இன்றைக்கு நிறைவேறி இருக்கின்றது.
இதெல்லாம் மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு நல்ல பெயரை உருவாக்கி கொடுத்துக் கொண்டிக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தன்னுடைய வயிற்றெரிச்சல் காரணமாக அரசியல் உள்நோக்கத்தோடு துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் ஏதோ கருத்து மோதல் இருப்பது போன்ற செய்தியை கூறியுள்ளார்.அது முழுக்க முழுக்க மறுக்கப்பட வேண்டிய, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதுபோன்ற பொய்களை எப்போதும் புதுச்சேரி மாநில மக்கள் நம்பமாட்டார்கள். முதல்வருக்கும், துணைநிலை ஆளுநருக்கும் கருத்துவேறுபாடு இருக்கின்றது என்றால் மக்கள் நலத்திட்டங்களை எப்படி ஒப்புதல் வாங்கி செயல்படுத்த முடியும்.
இன்றைக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இருக்கின்றோம். குறிப்பாக இலவச அரிசி திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. மருத்துவத்தை போன்று அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்களுக்கு மற்ற அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீதம் இடஒதுக்கீடு கொடுக்க விரைவில் கோப்பு தயார் செய்து துணைநிலை ஆளுநருக்கு அனுப்பப்ட இருக்கிறது.
நேற்று துணைநிலை ஆளுநர் எண்ணை தொலைபேசியில் அழைத்து அதுதொடர்பான கோப்பு எப்போது, எவ்வளவு காலக்கெடுவுக்குள் என்னிடத்தில் வரும் என்று கேட்டதோடு, உடனடியாக அதனை நீங்கள் அமல்படுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். இந்த அரசு நல்லமுறையில் செயல்பட வேண்டும். புதுச்சேரி மாநில மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று துணைநிலை ஆளுநரும், முதல்வரும் ஒரே நேர்க்கோட்டில் இருந்து இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முன்னாள் முதல்வர் நாராயணசாமி முயற்சிக்கின்றார். இதனை ஒருபோதும் ஏற்கமாட்டோம்,” என்று அவர் கூறினார்.