புதுச்சேரி: பொறியியல் கல்லூரி பேருந்திலிருந்து விழுந்த மாணவர் பலியான நிலையில், தரமற்ற பேருந்துகளை இயக்குவதாக கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியை சேர்ந்த மாணவன் அர்ஜூன். மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். வழக்கம்போல் கல்லூரி பேருந்தில் நேற்று மாலை வகுப்பு முடித்து வீட்டுக்கு வந்தார். கல்லூரி பேருந்தின் படிக்கட்டில் பேருந்து கதவில் சாய்ந்தபடி வந்தபோது, திடீரென பேருந்தின் கதவு திறந்து நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
அடுத்த நொடியே பின்னாடி வந்து கொண்டிருந்த மற்றொரு பேருந்து மாணவனின் தலையில் ஏறி இறங்கியது. இதில் மாணவன் அர்ஜுன் தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால் தனியார் பேருந்து நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவர் சாய்ந்ததால் பேருந்தின் கதவு திறந்ததாகவும், அதன் விளைவாக அவர் சாலையில் விழுந்ததாகவும் தெரியவந்தது. “பேருந்தின் கதவு சரியாக பராமரிக்கப்படாததால், கல்லூரிக்கு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மணக்குள விநாயகர் கல்லூரி பேருந்தின் ஓட்டுநர் மற்றும் ஒப்பந்ததாரர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் நுழைவுவாயில் முன்பு ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்..மாணவர் விஷயத்தில் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் அடிக்கடி இதே போன்ற விபத்து ஏற்படுவதாகவும் கல்லூரி பேருந்துகள் தரமில்லை என கூறி வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் காரணமாக கல்லூரி வளாகம் முழுவதும் மாணவர்கள் திரண்டனர். இதனிடையே கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாணவர்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தரமற்ற பேருந்துகள் மாற்றப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இன்று ஒரு நாள் பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.