புதுச்சேரி: குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக் கோரி புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு தரையில் அமர்ந்து நாராயணசாமி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
புதுச்சேரி நகர பகுதியான உருளையன்பேட்டை தொகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீரில் கழிவுநீர் கலந்தது. இதை குடித்து வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு சென்ற சிலர் இறந்துள்ளதாக அந்த பகுதியினர், அரசியல் கட்சியினர் புகார் கூறினர்.
பொதுப்பணித்துறை ஆய்வில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலந்தது தெரியவந்தது. இதை பொதுப்பணித்துறையினர் சீரமைத்தனர். இந்த நிலையில் நெல்லித்தோப்பு தொகுதியில் நேற்றைய தினம் கழிவுநீர் குடிநீருடன் கலந்தது. இதில் பாதிக்கப்பட்ட 27-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
குடிநீரில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி திமுக, சுயேச்சை எம்எல்ஏ நேரு, முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இன்று மதியம் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸார் ஆளுநர் மாளிகை எதிரே பாரதி பூங்காவின் நுழைவு வாயில் அருகே வந்தனர்.
அங்கு தரையில் அமர்ந்து திடீர் போராட்டம் தொடங்கினர். அவருடன் முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், மகிளா காங்கிரஸ் தலைவி நிஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் எஸ்எம்ஏ.கருணாநிதி உட்பட 20-க்கும் மேற்பட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த காங்கிரஸார் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆளுநர் மாளிகை நோக்கி வர தொடங்கினர்.
இதையடுத்து போலீஸார் ஆளுநர் மாளிகையின் இருபுறமும் பேரிகார்டுகளை அமைத்து யாரையும் உள்ளே விடாமல் தடுத்தனர். அவர்களுடன் காங்கிரஸார் வாக்குவாதம் செய்தனர். பின்னர், ஆளுநர் அழைப்பின் பேரில் ராஜநிவாஸ் உள்ளே பேச்சுவார்த்தைக்கு போலீஸார் நாராயணசாமி உள்ளிட்டவரை அழைத்துச் சென்றனர்.