புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை 3 வாரங்களுக்குள் 3 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையை பதித்துள்ளது. இதில் இரண்டு மூளைச்சாவு அடைந்தவர்கள் தானம் அளித்த சிறுநீரகங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மற்றொன்று உறவினர் தானம் மூலம் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும்.
இதனை சிறுநீரியல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர், மருத்துவர் சுதாகர் மற்றும் சிறுநீரக தலைமை மருத்துவர் குமார் ஆகியோரின் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு செயல்படுத்தியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர் சுதாகர் கூறியது: “நாள்பட்ட சிறுநீரக நோயுடன் போராடிய 36 வயது பெண்ணுக்கும், 46 வயது ஆணுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை புதிய நம்பிக்கையையும், உயிர் சக்தியையும் அளித்துள்ளது. மூன்றாவது மாற்று அறுவை சிகிச்சை கணவர், தனது மனைவிக்கு சிறுநீரகத்தை தானம் அளித்தார். அதுவும் சிறந்த முறையில் செய்து முடிக்கப்பட்டது. அவரது இந்தச் செயல், மற்றவர்களையும் உறுப்பு தானம் செய்ய ஊக்கப்படுத்தும். இந்த சாதனை மருத்துவ ஊழியர்களின் நிபுணத்துவத்தையும், குழு பணியையும் எடுத்துக்காட்டுகிறது.
மாற்றத்தை ஏற்படுத்தும் சுகாதாரப் பராமரிப்பில் நாங்கள் முன்னணியில் இருப்பதில் பெருமை கொள்கிறோம். எங்கள் மருத்துவக் கண்காணிப்பாளர் மருத்துவர் செவ்வேல் முழு மனதுடன் கூடிய ஊக்கம் மற்றும் ஆதரவுடன் இந்த குறிப்பிடத்தக்க சாதனை சாத்தியமானது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக் கான அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதில் மருத்துவமனை உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் நோயாளிகளுக்கு விதிவிலக்கான மருத்துவ தலையீடுகளையும் வழங்குகிறது” என்று மருத்துவர் சுதாகர் தெரிவித்தார்.