புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் வெளிமாநில போதை பொருட்கள் நடமாட்டத்தின் மீது புதுச்சேரி காவல் துறையினர் உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது
புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க வேண்டிய காவல் துறை நாளுக்கு நாள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருவது சரியானது அல்ல. இதற்குமேலும் சரியான நடவடிக்கையை காவல் துறையின் உயரதிகாரிகள் எடுக்கவில்லை என்றால் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்படும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை காப்பாற்ற யாராலும் முடியாது.
தற்போது புதுச்சேரி போக்குவரத்து எஸ்பி மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் தங்களது கடந்த கால சட்டம் – ஒழுங்கு பிரச்சனையில் ஒரு குற்றத்தை மூடி மறைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த குற்றச்சாட்டை தங்களது சுயநலத்துக்காக ஒரு கும்பல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கை வாபஸ் பெற கோடிக்கணக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளிடம் பேரம் பேசிய நிலையில் உடனடியாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை ஆகும்.
காவல் அதிகாரிகளிடம் பணம் கேட்டு மிரட்டியவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சாதாரணமாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளித்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் ஏதும் எடுப்பதில்லை. மாறாக, தவறு செய்பவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து நடத்தப்படுகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக காவல் துறையினரால் திருபுவனை பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள திமிங்கலம் எச்சம் இருப்பது கண்டறியப்பட்டு இந்த வழக்கு புதுச்சேரி காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சமுதாயத்தில் மிக சாதாரண நிலையில் உள்ள ஒன்றிரெண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பொருள் உண்மையில் திமிங்கிலம் எச்சம் தானா என்று தெரியவில்லை. அது சம்பந்தமான நிபுணர்கள் ஆய்வும் இதுவரை நடத்தப்படவில்லை. அப்படி உண்மையில் இந்த பொருள் ரூ.15 கோடி மதிப்புள்ள திமிங்கிலம் எச்சமாக இருக்குமேயானால், இதில் வசதிபடைத்த பல முக்கிய நபர்கள் நிச்சயம் சம்பந்தப்பட்டிருப்பார்கள். எனவே அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை சிபிஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணைக்கு டிஜிபி உத்தரவிட வேண்டும்.
புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு பூதாகரமான பிரச்சினைகளை தமிழக காவல் துறையினர் இங்கு வந்து கண்டுபிடிப்பது தொடர்கதையாக உள்ளது. தற்போது இந்த திமிங்கிலம் எச்சம், ஏற்கெனவே சந்தன ஆயில் தொழிற்சாலை, தமிழக டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் போலி மதுபான தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் தமிழக காவல் துறையால் தான் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படும் வெளிமாநில போதைப் பொருட்கள் நடமாட்டத்தின் மீது புதுச்சேரி காவல் துறையினர் உரிய நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் பல ஆய்வு கூட்டங்களை நடத்தியும் போதைப் பொருள் நடமாட்டத்தை காவல் துறையால் தடுக்க முடியவில்லை. நகரப்பகுதியில் உள்ள உருளையன்பேட்டை, ஒதியன்சாலை, பெரியகடை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் குற்றப்பிரிவு போலீஸார் மனது வைத்தாலே போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியும்” என்றார்.