புதுச்சேரி: நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி புதுச்சேரி நகரப் பகுதியில் இயங்கிய 13 ரெஸ்டோ பார்கள் உரிமத்தை கலால் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
புதுவையில் பல்வேறு வசதிகளுடன் கூடிய மதுபார்கள் சுமார் 400-க்கும் மேற்பட்டவை இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிதாக ரெஸ்டோ பார்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பார்களில் மது விருந்தோடு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமும் நடைபெறும். டிஜே போடும் பாட்டுக்கு இங்கு கூடும் இளைஞர்கள் நடனம் ஆடுவார்கள்.
இந்த ரெஸ்டோ பார்கள் நள்ளிரவு 12 மணி வரை இயங்க கலால் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், பெரும்பாலான வார இறுதி நாட்களில் இந்த பார்கள் நள்ளிரவை தாண்டியும் இயங்குவதாக தொடர் புகார்கள் வந்தது. இதனிடையே, மிஷன் வீதியில் இயங்கிய ரெஸ்டோ பாரில் ஏற்பட்ட தகராறில் விருதுநகரைச் சேர்ந்த சென்னையில் படிக்கும் கல்லூரி மாணவர் மோஷிக் சண்முக பிரியன் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, புதுவை கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா தலைமையில் கலால் துறையினர் நகர பகுதியில் உள்ள ரெஸ்டோ பார்களை கண்காணித்தனர். அப்போது 12 ரெஸ்டோ பார்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை கடந்து இயங்கியது தெரியவந்தது. இதனையடுத்து, இந்த ரெஸ்டோபார்கள் உரிமத்தை கலால் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. இன்று காலை ரெஸ்டோ பார்கள் சீல் வைக்கப்பட்டதாக கலால் துறை தரப்பில் குறிப்பிட்டனர்.
ஏற்கெனவே கல்லுாரி மாணவர் கொலை செய்யப்பட்ட மிஷன் வீதி ரெஸ்டோ பார் உரிமத்தையும் கலால் துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. அதேநேரத்தில், போலீஸார் தடயவியல் விசாரணைக்காக சீல் வைக்கப்படவில்லை. ஒட்டு மொத்தமாக புதுவை நகர பகுதியில் 13 ரெஸ்டோ பார்களின் உரிமம் சஸ்பெண்ட் ஆகியுள்ளது.