சென்னை: புதுவையை போதை தலைநகரமாக மாற்றி விடக் கூடாது என்றும் ரெஸ்டோ பார்களை மூடி, மதுவிலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக் கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும், அதனால் புதுவையில் போதைக் கலாச்சாரம் பரவி குற்றங்கள் பெருகுவதும் கவலையளிக்கின்றன. கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டிய புதுவை அரசு, வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிப்பது கண்டிக்கத்தக்கது.
ஏராளமான வரலாற்றுச் சிறப்புகளையும், கலாச்சாரப் பெருமைகளையும் கொண்ட புதுச்சேரி இப்போது அதற்காக புகழ் பெறாமல், மது மற்றும் கஞ்சா போதைக் கொண்டாட்டங்களுக்காக பெயர் பெற்று வருவது மிகவும் வேதனையளிக்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மது அருந்துவதற்காக புதுச்சேரி செல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இன்னொருபுறம் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களும் மது அருந்த தூண்டப்படுகின்றனர். இவை அனைத்துக்கும் காரணம் புதுச்சேரியில் தெருவுக்கு 4 மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டிருப்பது தான். அதிலும் குறிப்பாக ரெஸ்டோ பார்கள் என்ற பெயரில் குடிப்பகத்துடன் கூடிய மதுக்கடைகள் மூலைக்கு மூலை திறக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றச்செயல்கள் பெருகி விட்டன.
சில வாரங்களுக்கு முன் சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக குழுவாக புதுச்சேரி சென்றுள்ளனர். அங்குள்ள ஓ.எம்.ஜி என்ற ரெஸ்டோ பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அவர்களுக்கும், குடிப்பகப் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சண்முகப்பிரியன் என்ற மாணவர் குத்திக் கொலை செய்யப்பட்டார். ஷாஜன் என்ற மாணவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
இதுபோன்ற நிகழ்வுகள் புதுவையில் அடிக்கடி நிகழத் தொடங்கி விட்டன. குடிபோதையில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தல், திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்களும், விபத்துகளும் அதிகரித்து விட்டன. இதனால் புதுவை அதன் இயல்பிலிருந்து மாறி பெரும் கலாச்சாரச் சீரழிவை சந்தித்து வருகிறது. புதுச்சேரி படிப்படியாக கோவாவைப் போல மாறி வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் புதுவை இந்தியாவின் போதை தலைநகராக மாறிவிடும்.
புதுவையில் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பெற்றோரும் தங்களது பிள்ளைகள் மதுவுக்கு மிகவும் மோசமாக அடிமையாகி வருவதை எண்ணி மிகுந்த வருத்தத்திலும், வேதனையிலும் வாடுகின்றனர். புதுவையில் சாலைவிபத்துகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டன. மதுவால் புதுவை மிக மோசமான கலாச்சார சீரழிவை எதிர்கொண்டு வருவது கவலையளிக்கிறது.
புதுச்சேரியின் இந்த சீரழிவுகளுக்கு காரணம் அங்கு அளவில்லாமல் திறக்கப்படும் மதுக்கடைகள் தான். எஃப்.எல் 1, எஃப்.எல் 2 ஆகிய பெயர்களில் மதுக்கடைகளுக்கான உரிமங்கள் வழங்கப்படுகின்றன. எஃப்.எல் 1 என்பது மொத்த வணிகத்திற்கான உரிமம் ஆகும். எஃப்.எல் 2 சில்லறை வணிகத்திற்கான உரிமம்.
இதில் ரெஸ்டோ பார் எனப்படும் குடிப்பகங்களுக்கும் உரிமம் வழங்கப்படுகிறது. ரெஸ்டோபார் உரிமம் பெறுவதற்காக நிபந்தனைகளும், கட்டணமும் மிகவும் குறைவு என்பதால் அதிக எண்ணிக்கையில் அவை திறக்கப்பட்டு வருகின்றன.
ஓர் வீட்டில் 5 அறைகளும், ஓர் சமையல் அறையும் இருந்தால் அந்த இல்லத்தை ரெஸ்டோ பாராக மாற்றி விட முடியும். அதாவது அந்த அறைகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு சில்லறையில் மது வழங்குவது தான் ரெஸ்டோபார்களின் நோக்கம். ஆனால், விதிகளை மீறி கட்டுப்பாடு இல்லாமல் ரெஸ்டோ பார்களில் அனைவருக்கும் கட்டுப்பாடின்றி மது வணிகம் செய்யப் படுகிறது. அதனால், புதுவையில் மது வெள்ளமாக ஓடுகிறது; சீரழிவுகள் பூகம்பமாக வெடிக்கின்றன.
புதுவை ஒன்றியப் பிரதேசத்தில் இன்றைய நிலையில், 86 மொத்த வணிகக் கடைகள், 240 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 476 சில்லறை வணிகக் கடைகள், 107 சாராயக் கடைகள், 81 கள்ளுக்கடைகள் என மொத்தம் 750 போதை பானக்கடைகள் உள்ளன. புதுவையின் மக்கள்தொகையான 13.94 லட்சத்துடன் ஒப்பிடும் போது 1859 பேருக்கு ஒரு போதைபானக் கடைகள் உள்ளன.
புதுச்சேரி நகரத்தில் மட்டும் 536 போதைபானக்கடைகள் உள்ளன. இது 1772 பேருக்கு ஒரு கடையாகும். காரைக்காலில் இன்னும் குறைவாக 1516 பேருக்கு ஓர் போதைபானக் கடை உள்ளது. கோவாவில் 250 பேருக்கு ஒரு மதுக்கடை இருக்கும் நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக மதுக்கடைகள் உள்ள மாநிலமாக புதுவை தான் திகழ்கிகிறது.
புதுவையில் இப்போது இருக்கும் மதுக்கடைகளே மிகவும் அதிகம் என்று கூறப்படும் நிலையில், இன்னும் 100 ரெஸ்டோபார்களுக்கு அனுமதி அளிக்க புதுவை அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் நடந்து விட்டால், புதுவையில் மதுக்கடைகள் உள்ளன என்று கூறுவதற்கு பதிலாக மதுக்கடைகளுக்குள் புதுவை உள்ளது என்று கூற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
அதேபோல், புதுவையில் ஏற்கனவே 3 மது ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 6 மது ஆலைகளுக்கு புதுவை அரசு கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. ஆனால், ஆளுனர் தலையிட்டு அந்த ஆலைகளுக்கு உரிமம் அளிப்பதை தடுத்து நிறுத்தியிருக்கிறார். இல்லாவிட்டால் புதுவை மாநிலத்தில் மது சுனாமியாக ஓடிக் கொண்டிருந்திருக்கும்.
புதுவையில் ஏராளமான மது ஆலைகள், மதுக் கடைகள், குடிப்பகங்கள் இருப்பதை யாராலும் நியாயப் படுத்த முடியாது. அண்மைக்காலங்களில் பள்ளி மாணவர்கள் மது அருந்தி விட்டு வகுப்புகளுக்கு வருவது அதிகரித்து வருகிறது. மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு மதுக்கடைகளுக்கும், குடிப்பகங்களுக்கும் தாராளமாக அனுமதி அளிப்பதை ஏற்க முடியாது.
பணம் ஈட்டுவது மட்டுமே அரசின் நோக்கமாக இருக்கக் கூடாது. பணத்திற்காக மது வணிகத்தை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் இம்மண்ணில் திடமான இளைஞர்களே இருக்க மாட்டார்கள் என்பதே உண்மை. இதை உணர்ந்து புதுவை மாநிலத்தை மதுவின் பிடியிலிருந்து மீட்க அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கான முதல் நடவடிக்கையாக புதுவையில் இனி புதிய மது ஆலைகளுக்கோ, மதுக்கடைகளுக்கோ அனுமதி அளிக்கப்படாது என்று புதுவை அரசு அறிவிக்க வேண்டும். அதன்பின் இப்போது இருக்கும் மதுக்கடைகள், குடிப்பகங்கள் ஆகியவற்றை படிப்படியாக மூட வேண்டும். புதுவையிலும் மது விலக்கு என்ற இலக்கை நோக்கியப் பயணத்தை அம்மாநில அரசு உடனடியாக தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.